IND vs NZ: "வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓவர் பில்டப் கொடுக்காதீங்க அதனால்..".. கொதித்த பேட்டிங் கோச் கோடக்
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து சமூக வலைதளங்களில் உருவாக்கப்படும் அதீத பில்டப்பிற்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் விருப்பப்படியோ அல்லது இணையதள அழுத்தத்தை வைத்தோ பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய முடியாது என்றும், அணியின் நலனைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் காட்டமாக பேசி இருக்கிறார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிதான்ஷு கோடக், "வைபவ் சூர்யவன்ஷியை அனைவருக்கும் பிடிக்கும். அவரிடம் மிகச் சிறந்த திறமையும், பிரகாசமான எதிர்காலமும் உள்ளது. ஆனால், மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக மட்டுமே ஒருவரை ஆடும் லெவனில் சேர்க்க முடியாது. 15 முதல் 16 வயதேயான ஒரு சிறுவன் மீது இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளைத் திணிப்பது அவரது கிரிக்கெட் வளர்ச்சிக்கு நல்லதல்ல. அது அவருக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை மட்டுமே உருவாக்கும். மேலும், களத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் மற்ற வீரர்களின் உழைப்பைக் கொச்சைப்படுத்துவது போல் வருத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்" என்றார்.

தற்போதைய தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மாவின் ஃபார்மை சுட்டிக்காட்டிய அவர், "சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ரன்களைக் குவித்து இந்திய அணிக்கு வெற்றிகளைத் தேடித்தந்து வருகின்றனர். அவர்கள் இந்த அளவிற்கு மிரட்டலாக பேட்டிங் செய்யும் போது, அவர்களை நீக்கிவிட்டு வைபவை எப்படி உள்ளே கொண்டுவர முடியும்? ஒரு போட்டியில் 11 பேர் மட்டுமே விளையாட முடியும் என்ற யதார்த்தத்தை சமூக வலைதளங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பெஞ்சில் உட்கார வைக்கப்படுவது குறித்து வைபவின் மனநிலை பற்றிப் பேசிய கோடக், "வைபவ் மிகவும் பக்குவமடைந்த சிறுவன். தான் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்ற காரணத்தை முழுமையாக உணர்ந்துள்ளார். அவர் இதுவரை எந்தவொரு புகாரும் சொன்னதில்லை. சர்வதேச வீரர்களுடன் இருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி பீல்டிங், பேட்டிங் மற்றும் உடற்தகுதியை மெருகேற்றுவதில் மட்டுமே அவர் தீவிரமாகவனம் செலுத்தி வருகிறார்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

