கடைசி பந்தில் ஆட்டமிழந்த விராட் கோலி.. கம்பேக் கொடுத்த இந்திய அணி.. 3வது நாளில் நடந்தது என்ன?
பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது. நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், பின்னர் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 2வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் செஷனிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ரச்சின் ரவீந்திரா - டிம் சவுதி இருவரும் அசத்தலாக விளையாடி அணியை மீட்டனர்.

அதிரடியாக ஆடிய ரச்சின் ரவீந்திரா அபார சதம் அடிக்க, இன்னொரு பக்கம் டிம் சவுதி அரைசதம் அடித்தார். இறுதியாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களை விளாசினார். இதன் மூலமாக நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி தோல்வியை தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஒரு முடிவுகள் தான் களமிறங்கி இருந்தனர். முதல் சில ஓவர்கள் நிதானம் காட்டினாலும், ஸ்பின்னர்களை அட்டாக்கில் வந்ததும் அசால்ட்டாக பவுண்டரிகளை விளாசி தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த போது, ரன்கள் சேர்க்க அவசரம் காட்டிய ஜெய்ஸ்வால் வெறும் 35 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.
ஆனால் இன்னொரு பக்கம் பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்டிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து பேட்டிங் செய்த போது, அஜாஸ் படேல் பந்தில் 52 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதன்பின் விராட் கோலி - சர்ஃபராஸ் கான் கூட்டணி இணைந்தது. சர்ஃபராஸ் கான் தொடக்கம் முதலே அதிரடி காட்ட, இன்னொரு பக்கம் விராட் கோலி நிதானமாக ரன்களை சேர்த்தார். ஆனால் அஜாஸ் படேலை அட்டாக் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக இருந்தனர்.
அதிரடியாக ஆடிய சர்ஃபராஸ் கான் 42 பந்துகளில் அரைசதம் கடக்க, இன்னொரு பக்கம் விராட் கோலி 70 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இது அவரின் 31வது அரைசதமாகும். இவர்களின் பார்ட்னர்ஷிப் 99 பந்துகளில் 100 ரன்களை கடந்து சென்றதால், இந்திய அணியின் ஸ்கோரும் விரைவாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்றைய நாளின் கடைசி ஓவரை வீச கிளென் பிலிப்ஸ் வந்தார்.
அந்த ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழக்க, சின்னச்சாமி மைதானமே அமைதியானது. இறுதியாக 3வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை சேர்த்திருந்தது. இன்னும் 125 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ள நிலையில், சர்ஃபராஸ் கான் 78 பந்துகளில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி அடித்து 70 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 3வது நாளில் மட்டும் மொத்தமாக 453 ரன்கள் சேர்க்கப்பட்டு, 10 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications