மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் இந்திய அணி முதல் முறையாக மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோற்று இருக்கிறது.
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் இருந்து இப்படி ஒரு தோல்வியை இந்தியா பெற்றது கிடையாது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இந்திய அணி இழந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்று ஒயிட் வாஷை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மூன்றாவது டெஸ்டில் 147 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறினார்கள். குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன் சேர்க்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன் மூலம் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் இந்திய அணி இனிமேல் தொடர்ந்து வெளிநாடுகளில் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போகிறது. வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டி அதன் பிறகு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டி என தொடர்ந்து இந்திய அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன் பிறகு இந்திய அணி இனி 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிராக சொந்த மண்ணில் விளையாடுகிறது.
இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட ஜாம்பவான்கள் சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். விராட் கோலி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி 93 ரன்களும், ரோஹித் சர்மா மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி 91 ரன்கள் எடுத்தார்கள்.
இனி அடுத்த 10 டெஸ்ட் போட்டியிலும் வெளிநாடுகளில் நடைபெறுவதால் அதில் இருவரும் பெரிய அளவில் சாதிக்க வாய்ப்பு இல்லை.இதனால் ரோகித் சர்மா, விராட் கோலி,அஸ்வின் ஜடேஜா போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓரம் கட்ட கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.