பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினை தொடக்கத்திலேயே அட்டாக்கில் கொண்டு வராதது ஏன் என்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியின் மூலமாக சொந்த மண்ணில் 3வது முறையாக ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியை தோல்வியை அடைந்துள்ளது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் இந்திய அணி தோற்றிருந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஏராளமான தவறான முடிவுகளை எடுத்துள்ளார். டாஸ் வென்ற பின் பேட்டிங்கை தேர்வு செய்தது மிகப்பெரிய தவறாக இருந்தாலும், நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போதும் மோசமான தவறுகளை செய்தார். நியூசிலாந்து அணியின் டெய்லெண்டர்கள் பேட்டிங் வந்த பின் நேரடியாக வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்ய கொண்டு வந்திருக்க வேண்டும்.
ஆனால் உணவு இடைவேளைக்கு பின் பும்ரா மற்றும் சிராஜை அட்டாக்கில் கொண்டு வந்தார். இதனால் நியூசிலாந்து அணி அதிக ரன்களை முன்னிலையாக பெற்றது. அதேபோல் 2வது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பவுலிங் மாற்றங்களில் ரோஹித் சர்மா தவறு செய்தார். முதல் 10 ஓவர்களில் பும்ரா மற்றும் சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து அசத்தினார்.
அதன்பின் ஜடேஜாவை அட்டாக்கில் கொண்டு வந்ததற்கு பதிலாக அஸ்வினை அட்டாக்கில் கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனென்றால் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியின் 3 மற்றும் 4 ஆகிய இன்னிங்ஸ்களில் மட்டும் அஸ்வின் 197 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் பெங்களூரில் மட்டும் கடைசி இன்னிங்ஸில் 16 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி அசத்தலான ரெக்காட்டை கொண்டுள்ளார்.
கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் கூட 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி வெறும் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அப்படியான ஒரு அனுபவம் வாய்ந்த பவுலரை 24 ஓவர்களுக்கு பின் ரோஹித் சர்மா அட்டாக்கில் கொண்டு வந்திருக்கிறார். அதுவும் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 10 ரன்கள் மட்டுமே இருந்த போது பவுலிங் செய்ய வாய்ப்பு அளித்தார்.
முதல் இன்னிங்ஸில் அஸ்வின் கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் இந்த பிட்சில் பவுலிங் செய்ததால், சில ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்தார். ஆனால் பிற்பாதியில் அதனை உணர்ந்து கொண்ட அஸ்வின், உடனடியாக வேகத்தை குறைத்து பவுலிங் செய்தார். இதனால் ரோஹித் சர்மாவின் தவறான முடிவுகளே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.