துபாய்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் பரிதாபமாக வெளியேறி இருக்கிறது.
துபாயில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம், 23 ரன்களிலும் இமாமுல் ஹக் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து கேப்டன் ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகில் ஆகியோர் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ரிஸ்வான் 46 ரன்களில் ஆட்டம் இழக்க சவுத் ஷகில் 62 ரன்களில் திரும்பினர். நடு வரிசையில் குஸ்தில் ஷா மட்டும் 38 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் தடுமாறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 241 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 பந்துகளில் 20 ரன்கள் இந்திய அணியின் துணை கேப்டன் கில் நிதானமாக விளையாடி 52 பந்துகளில் 46 ரன்கள் சேத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.இந்திய அணி 100 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர்.
ஸ்ரேயாஸ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் கோலி மறுமுனையில் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். 67 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இந்த ஜோடி 114 ரன்களில் மூன்றவது விக்கெட்டுக்கு சேர்த்தது. மறுபுறம் அபாரமாக விளையாடிய கோலி கடைசி வரை நின்று 111 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும்.
இதன் மூலம் இந்திய அணி 42.3 ஓவர்களில் எல்லாம் நான்கு விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்தது.பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாகின் ஆப்ரிடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 82 ஆவது சதத்தை அடித்திருக்கிறார்.அது மட்டும் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.