அகமதாபாத்: பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து ஓய்வறை நோக்கி சென்ற போது மைதானத்தில் இருந்த அகமதாபாத் கிரிக்கெட் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி அத்துமீறிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத் மைதானத்தில் சில சர்ச்சைகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். டாஸின் போது ரோகித் சர்மாவுக்கு உற்சாக குரல் கொடுத்து வரவேற்ற ரசிகர்கள், ரவி சாஸ்திரி கேட்ட கேள்விக்கு பாபர் அசாமை பேச கூட விடாமல் வம்புக்கு இழுத்தனர்.

இந்திய அணிக்கு எதிராக மிகச்சிறந்த கட்டமைப்பு கொண்ட மைதானத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் கேப்டனுக்கு ரசிகர்கள் இப்படியொரு வரவேற்பை கொடுப்பார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதன்பின் தேநீர் இடைவேளையின் போது அகமதாபாத் மைதானத்தில் திடீரென ஜெய் ஸ்ரீ ராம் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது தொடங்கிய ரசிகர்களின் கோஷம் கடைசி வரை ஓயவில்லை.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 49 ரன்களில் பும்ராவின் அபாரமான பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது ஓய்வறைக்கு திரும்பிய பாகிஸ்தான் அணி வீரரான ரிஸ்வானை பார்த்து, அகமதாபாத் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கும்பலாக கரகோஷம் எழுப்பி அத்துமீறியுள்ளனர். வழக்கமாக இந்திய கிரிக்கெட்டர்கள் பெயரையோ, இந்தியா பெயரையோ கூறியே கரகோஷங்கள் எழுப்பப்படும்.

ஆனால் அகமதாபாத் மைதானத்தில் மட்டும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் ஒருங்கிணைந்து கரகோஷம் எழுப்ப வைக்கக் கூடிய டிஜே-க்களும் இதுபோன்ற செயல்படுவதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலோ, அல்லது 2016ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் போட்டியிலோ இப்படியான விஷயங்கள் நடக்கவில்லை.
வழக்கமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் போது வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களையும் கொண்டாடுவார்கள். டேவிட் வார்னரில் தொடங்கி கேன் வில்லியம்சன், டூ பிளஸிஸ், மேக்ஸ்வெல், பொல்லார்ட், பிராவோ, சான்ட்னர் என்று அவ்வளவு வீரர்களை கொண்டாடியுள்ளனர். ஆனால் இந்தியாவுக்கு முதல்முறையாக வந்துள்ள பாகிஸ்தான் வீரர்களிடம் அத்துமீறியுள்ளது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.