IND vs PAK: உலகிலேயே எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த ரோஹித் சர்மா.. ஓபனிங் ரெக்கார்டு
துபாய்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் துவக்க வீரராக மட்டும் அவர் 9000 ரன்களைச் சேர்த்து இமாலய சாதனையை படைத்தார். மேலும் இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையும் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருந்தார். தற்போது அதற்கு அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் 20 ரன்களை எடுத்தார். அப்போது ரோஹித் சர்மா துவக்க வீரராக மட்டும் 9000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்தார்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. அப்போது ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். அப்போது இந்த மைல்கல் சாதனையை அவர் கடந்து இருந்தார்.
உலக அளவில் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக 9000 ரன்களை விரைவாக எட்டிய வீரர்களின் பட்டியல்:
ரோஹித் சர்மா - 181 இன்னிங்ஸ்கள்
சச்சின் டெண்டுல்கர் - 197 இன்னிங்ஸ்கள்
சௌரவ் கங்குலி - 231 இன்னிங்ஸ்கள்
இந்த உலக அளவிலான பட்டியலில் இடம்பெற்றிருக்கும் முதல் மூன்று வீரர்களும் இந்திய வீரர்களே என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்திருந்தது. சவுத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும், குஷ்தில் ஷா 38 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 20 ரன்கள், சுப்மன் கில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.


Click it and Unblock the Notifications