அகமதாபாத்: இந்திய அணியின் ரோகித் சர்மாவிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் இப்படியொரு ஆட்டத்தை பார்த்ததே இல்லை என்றும், பாகிஸ்தான் பந்துவீச்சையே நசுக்கிவிட்டார் என்று முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், சிராஜ், ஹர்திக், பும்ரா மற்றும் ஜடேஜா உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 63 பந்துகளில் 6 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 86 ரன்களை குவித்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதிலும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் முதுகெலும்பாக இருக்கும் ஷாகின் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராஃப் இருவரையும் பொளந்து கட்டினார்.
ஷாகின் அப்ரிடி பந்தில் பவுண்டரிகளை விளாசிய ரோகித் சர்மா, ஹாரிஸ் ராஃப் பந்தில் இமாலய சிக்சர்களை விளாசி தள்ளினார். இதன் மூலம் விண்டேஜ் ரோகித் சர்மா வந்துவிட்டதாக ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சோயப் அக்தர் பேசுகையில், பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் மோசமாக இருந்தது என்பதை விடவும் பெரிய ஏமாற்றத்தை அளித்தது என்றே கூற வேண்டும். பாகிஸ்தான் அணியை இந்திய வீரர்கள் நசுக்கிவிட்டார்கள் என்றே சொல்லும் அளவிற்கு தான் செயல்பாடுகள் இருந்தது, ரோகித் சர்மா ஒன் மேன் ஆர்மியாக விளையாடினார். கடந்த இரு ஆண்டுகளாக இந்த ரோகித் சர்மாவை பார்க்க முடியவில்லை. ரோகித் சர்மாவிடம் இல்லாத ஷாட்களே கிடையாது. அவர் ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

இந்திய அணி ஒரு முழுமையான அணியாக காட்சியளிக்கிறது. பாகிஸ்தான் அணியின் பவுலிங் அட்டாக்கை எல்கேஜி பிள்ளைகளை எதிர்த்து விளையாடுவது போல் விளையாடி மிரட்டிவிட்டார். கடந்த இரு ஆண்டுகளாக பெரியளவில் ரன்கள் சேர்க்காத ரோகித் சர்மாவை விமர்சித்ததற்கு மொத்தமாக சேர்த்து வைத்து பதிலடி கொடுத்துள்ளார். இது தான் ரோகித் சர்மாவின் கம்பேக் என்று சொல்வேன். பவுலர்களை மொத்தமாக சிதறடித்து, கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து செல்ல தேவையில்லை என்று நிரூபித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.