IND vs PAK: பும்ராவின் 5 வருட சாதனையை உடைத்தெறிந்த பாகிஸ்தான் வீரர்.. 2 சிக்ஸர்கள் அடித்த ஃபர்ஹான்
துபாய்: 2025 ஆசிய கோப்பையில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை பாகிஸ்தான் இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டு, ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை ஒரு சிக்ஸர் கூட விட்டுக்கொடுக்காமல் வைத்திருந்த பும்ராவின் சாதனையை, ஃபர்ஹான் தனது அதிரடியால் உடைத்தெறிந்தார். ஆனாலும், அவர் ஆமை வேகத்தில் தான் ரன் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது பாகிஸ்தான். முதல் ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே சயிம் அயூப்பை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். அதைத் தொடர்ந்து, தனது முதல் ஓவரிலேயே ஆபத்தான வீரர் முகமது ஹாரிஸை (3 ரன்கள்) பும்ரா வெளியேற்ற, பாகிஸ்தான் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், பவர்பிளேயில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

பும்ராவை குறிவைத்த ஃபர்ஹான்:
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவையே குறிவைத்துத் தாக்கினார். பும்ரா வீசிய 4-வது ஓவரின் மூன்றாவது பந்தை, ஒரு துல்லியமான ஷாட் மூலம் வைட் லாங்-ஆன் திசையில் ஃபர்ஹான் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். பும்ராவுக்கே சிக்ஸர் அடித்தது, பாகிஸ்தான் வீரர்கள் அறைக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.
அதோடு அவர் நிற்கவில்லை. மீண்டும் பும்ரா வீசிய 6-வது ஓவரில், ஒரு மிரட்டலான புல் ஷாட் மூலம் பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் இரண்டாவது சிக்ஸரை விளாசி, இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியளித்தார்.
உடைந்த வரலாற்றுச் சாதனை:
இந்த இரண்டு சிக்ஸர்கள் மூலம், சாஹிப்சாதா ஃபர்ஹான் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, ஒரு சிக்ஸர் கூட விட்டுக்கொடுத்ததில்லை. அந்தச் சாதனையை, இன்று ஃபர்ஹான் மட்டுமே அவருக்கு எதிராக இரண்டு சிக்ஸர்களை விளாசி உடைத்தெறிந்துள்ளார். இப்படி சிக்ஸர்கள் அடித்தாலும் 7 ஓவர்கள் முடிவில் ஃபர்ஹான் 23 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
இந்தக் கட்டுரை எழுதப்பட்ட போது 7 ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்தது. தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், சாஹிப்சாதா ஃபர்ஹான் (20* ரன்கள்) மற்றும் ஃபக்கர் ஜமான் (17* ரன்கள்) ஜோடி, ஆடி வந்தது.


Click it and Unblock the Notifications