IND vs PAK: 3.5 ஓவரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான்.. பாண்டியா கேப்டன்சியில் மெகா சொதப்பல்
மாங் காங்: 2026 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் மாங் காக் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஒரு அணிக்கு 6 வீரர்கள் மட்டுமே களமிறங்கும் 6 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில், குருணால் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறிய மைதானம் என்பதால் சிக்சர் மழை பொழியும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்திய பேட்டர்கள் பெருத்த ஏமாற்றமளித்தனர்.

தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான நிதிஷ் ராணா 14 பந்துகளை வீணடித்து வெறும் 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் அவரே 'ரிட்டயர்டு அவுட்' முறையில் பெவிலியன் திரும்பினார்.
3-வது வீரராக வந்த ஷஷாங்க் சிங் மட்டும் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்து அதிரடி காட்டினார். வெறும் 11 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார். போட்டி விதிப்படி 50 ரன்கள் எடுத்த பேட்டர் கட்டாயம் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேற வேண்டும் என்ற நிலையில், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷஷாங்க் சிங் 40 ரன்கள் எடுத்த நிலையிலேயே வெளியேறினார். அதுவே சரிவுக்கும் காரணமாக அமைந்தது.
இதன் பின்னர் வந்த அதிரடி வீரர்கள் ராகுல் தெவாதியா மற்றும் கேப்டன் குருணால் பாண்டியா ஆகிய இருவரும் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்தியாவுக்கு விக்கெட்டுகள் சரிய, விதிப்படி மீண்டும் ஷஷாங்க் சிங் பேட்டிங் செய்ய களமிறங்கினார். ஆனால் அவரும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் தமிழக பந்துவீச்சாளர் நடராஜன் சற்று ஆறுதல் தரும் வகையில் ஆடி 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறிய மைதானத்தில் 100 ரன்களுக்கு மேல் எடுத்தாலும்கூட எளிதாக சேஸ் செய்ய முடியும் என்ற சூழலில், இந்தியா வெறும் 88 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தானுக்கு மிக எளிய இலக்கை நிர்ணயித்தது.
அடுத்து பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் வீரர்கள் சரமாரியாக சிக்ஸர்கள் அடித்தனர். பாண்டியா வீசிய ஓவரில் 5 சிக்ஸ் அடித்து மொத்தம் 31 ரன்கள் சென்றன. நடராஜன் 28 ரன்களை வாரி வழங்கினார். பாகிஸ்தான் அணியில் காவாஜா 12 பந்துகளில் 41 ரன்களும், அப்பாஸ் அப்ரிடி 8 பந்துகளில் 35 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். 3.5 ஓவர்களில் 89 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.


Click it and Unblock the Notifications

