மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கின்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் மட்டுமே இந்தியா சிறப்பாக விளையாடியது என்று கூறிவிட முடியாது. இந்திய அணிக்கு இன்னும் பல பெரிய பிரச்சனைகள் காத்திருக்கிறது. இதனை எல்லாம் சரி செய்தால் மட்டுமே ஆஸ்திரேலியா போன்ற அணிகளை எதிர் கொள்ளும் போது வெற்றி பெற முடியும்.

இதைதான் முன்னாள் கேப்டன் தோனி எப்போதும், அணி வெற்றி பெற்றுவிட்டதால் அணியில் இருக்கும் சில ஓட்டைகளை மூடி மறைத்து விட முடியாது.அந்த ஓட்டைகளை சரி செய்தால் மட்டுமே இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கூறுவார். இதைத்தான் தற்போது இந்தியா செய்ய வேண்டும்.ஆடுகளம் தோய்வாக மாறியது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் 30 ரன்கள் இடைவெளியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்தது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அப்போது ஆடுகளம் தோய்வாக மாறிவிட்டது என்பதை வீரர்கள் கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் தங்களுடைய இன்னிங்சை மாற்றி அமைத்து இருக்க வேண்டும்.
இந்த ஆடுகளத்தில் 140 ரன்கள் எடுத்தாலே அது மிகப்பெரிய இலக்காகும்.
இந்த சூழலில் இந்திய அணியில் ஸ்டார் வீரர்களான சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இதனை இந்தியா உடனடியாக சரி செய்ய வேண்டும். சிவம் துபே போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி இந்திய அணிக்காக கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார்கள்.
ஒருவேளை சிவம் துபேவால் சரியாக விளையாட முடியவில்லை என்பதை அறிந்தால் உடனடியாக அவரை அணியிலிருந்து தூக்கி விட்டு சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும். இதேபோன்று இந்திய அணிக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனை தொடக்க வீரர்கள் தான். ஆடுகளம் நன்றாக இருக்கும் போது அதிக ரன்கள் குவிக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் விராட் கோலி தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களாக சொதப்பி இருக்கின்றார்.
இதனால் விராட் கோலி இனிவரும் போட்டிகளிலாவது நிலைத்து நின்று பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும். அப்படி விராட் கோலிக்கு தொடக்க வீரர் ஒத்துவரவில்லை என்றால் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக சேர்த்து விட்டு விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு தள்ள வேண்டும். இதன் மூலம் சிவம் துபே அணியில் இடம் பெற முடியாது.