அதிக அரைசதங்கள்.. சங்கக்காரா சாதனை க்ளோஸ்.. சச்சினை நெருங்கும் விராட் கோலி.. பிறந்தநாள் ஸ்பெஷல்!
கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி இந்திய அணி தொடக்கம் கொடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் இங்கிடி முதல் ஓவரை வீசினார்.

தொடக்கம் முதலே ரோகித் சர்மா அதிரடியாக விளையாடிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தும், சுப்மன் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனிடையே களம் புகுந்த விராட் கோலி அபாரமாக சில பவுண்டரிகளை விளாசி சிறப்பாக ரன் குவித்தார்.
தென்னாப்பிரிக்கா அணி கேசவ் மஹாராஜ் மற்றும் ஷம்சி இருவரையும் வைத்து அட்டாக் செய்தது. திடீரென பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமைந்ததால், இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது. விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே ஸ்பின்னர்களை கவனமாக எதிர்கொண்டனர். இதனால் இந்திய அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் சேர்த்திருந்தது.
முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் குவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 15 ஓவர்களில் வெறும் 52 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. விக்கெட்டை மட்டும் கொடுக்காமல் சிறப்பாக ரன்கள் சேர்க்க விராட் கோலி 67 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் பிறந்தநாளன்று அரைசதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அதேபோல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 6வது முறையாக அரைசதம் கடந்து அசத்தியுள்ளார் கோலி.

அதேபோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 71வது அரைசதத்தை விளாசி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை அரைசதங்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். இதுவரை 278 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 119 முறை அரைசதங்களை கடந்து அசத்தி இருக்கிறார். சங்கக்காரா விளாசி இருந்த 118 அரைசதங்களை விராட் கோலி முறியடித்துள்ளார். இவருக்கு முன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 145 முறை அரைசதங்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications