IND vs SA: உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்கா 159 ரன்களுக்கு ஆல்அவுட்.5 விக்கெட் வீழ்த்திய பும்ரா
கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி கடைசியாக 2010 ஆம் ஆண்டு நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தான் வென்றது.
அதன் பிறகு விளையாடிய எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகளில் இந்தியாவே வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிவடைந்தது. இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் ஏய்டன் மார்க்கரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் அதிரடியாக விளையாடி 10.3 ஓவரில் எல்லாம் 57 ரன்கள் சேர்த்தனர். இதில் ரியான் 23 ரன்களில் ஆட்டம் இழக்க மற்றொரு தொடக்க வீரரான எய்டன் மார்க்கரம் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து மூன்றாவது வீரராக களம் இறங்கிய வியான் முல்டர் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டெம்பா பவுமா, 11 பந்துகளுக்கு எதிர்கொண்டு மூன்று ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து நடுவரிசையில் டோனி டீ சொர்ஸி 24 ரன்களிலும், கையில் வெர்ரைன் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்பு களமிறங்கிய கீழ் வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற மார்கோ யான்சன் மூன்று ரன்களிலும் சைமன் ஹார்மர் ஐந்து ரன்களிலும் கேசவ் மஹராஜ் டக் அவுட்டும் ஆனார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சை 55 ஓவர் முடிவில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications