IND vs SA: இன்னும் 41 ரன்தான் தேவை.. மெகா ரெக்கார்டு.. சச்சின், கோலி வரிசையில் இணையப் போகும் ரோஹித்
ராய்ப்பூர்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு இமாலய மைல்கல்லை எட்டும் தூரத்தில் உள்ளார். ராய்ப்பூரில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவர் இன்னும் 41 ரன்கள் எடுத்தால் வரலாற்றுச் சாதனை படைப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறக் காத்திருக்கிறார்.
சர்வதேச அரங்கில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோஹித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ரன்களைக் குவித்துள்ளார். 20,000 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை அடைய அவருக்கு இன்னும் வெறும் 41 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

ஜாம்பவான்கள் பட்டியலில் ரோஹித்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர். அந்த பிரம்மாண்ட சாதனைப் பட்டியலில் ரோஹித் இணையவுள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள்
- விராட் கோலி - 27,808 ரன்கள்
- ராகுல் டிராவிட் - 24,064 ரன்கள்
ராய்ப்பூரில் 41 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், இந்த ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்வார்.
ரோஹித்தின் சர்வதேச ரன் வேட்டை
மொத்த ரன்கள்: 19,959
ஒருநாள் போட்டிகள்: 11,427 ரன்கள்
டெஸ்ட் போட்டிகள்: 4,301 ரன்கள்
டி20 போட்டிகள்: 4,231 ரன்கள்
சதங்கள்: 50
அரைசதங்கள்: 110
செம ஃபார்மில் ஹிட்மேன்
2025-ம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 561 ரன்களைக் குவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கூட 51 பந்துகளில் 57 ரன்கள் விளாசி நல்ல ஃபார்மில் உள்ளார். அந்தப் போட்டியில் தான் அப்ரிடியின் சிக்ஸர் சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த உலக வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்தார்.
அதற்கு முன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் அடித்து இருந்தார். தான் விளையாடிய கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.
அதே ஃபார்முடன் ராய்ப்பூரில் நடைபெறும் போட்டியில், ரோஹித் சர்மா அந்த 41 ரன்களை எளிதாகக் கடந்து 20,000 ரன்கள் சாதனைப் பட்டியலில் இணைவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications