மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஆறு மாதங்கள் என்று இருக்கிறது. ஆனால் இந்திய அணி இந்த ஆறு மாதங்களில் வெறும் ஐந்து டி20 போட்டிகளில் தான் விளையாடப் போகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
காரணம் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் இரண்டு மாதம் விளையாடுவார்கள். இதனால் எஞ்சியுள்ள நான்கு மாதத்தில் ஏழு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு மாதம் விளையாட போகிறார்கள். இதனால் எஞ்சிய இந்த காலத்தில் தான் இந்திய அணி ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி உலகக் கோப்பை தொடருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்.

இந்திய டி20 அணியில் விடை தெரியாத ஐந்து கேள்விகள் இருக்கிறது. அதற்கு இன்னும் இந்திய அணி பதில் கண்டுபிடிக்கவில்லை. இதில் முதல் கேள்வி இந்திய அணியின் தொடக்க வீரர் யார் என்ற கேள்விதான். கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் பங்கேற்கவும் அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கிறார்கள். இதனால் தொடக்க வீரர்கள் யார் என்று கேள்விக்கு இன்னும் பதில் தெரியவில்லை. இரண்டாவது கேள்வி இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு விடை இல்லை. அப்படி அவர்கள் திரும்பினால் எந்த இடத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்ற கேள்வி இருக்கிறது.
தற்போது டி20 உலக கோப்பை அணிக்கு ஆல்ரவுண்டர் ஜடேஜா விளையாடுவார் என தெரிகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெற்றிருக்கிறார். இதன் காரணமாக இரண்டாவது சுழல் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கண்டுபிடிக்கவில்லை. தற்போது டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை ரவி பிஸ்னாய் உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார்.
ஆனால் குல்தீப் யாதவ் அனுபவமிக்க வீரராக இருப்பதால் இவர் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நான்காவது கேள்வி ஹர்திக் பாண்டியா காயத்தால் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதில் இரண்டாவது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை இந்தியா தயார் செய்து இருக்கிறதா? என்பதுதான். இதற்கு தீபக்சாஹர் பதிலாக திகழ்வார் என்று நம்பப்பட்டாலும் அவர் கடந்த ஒன்றரை வருடத்தில் இரண்டு டி20 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார்.
இதேபோன்று டெத் பவுலர்கள் யார் என்ற கேள்விக்கும் இன்னும் விடை தெரியவில்லை. பும்ரா, சமி ஆகியோர் டி20 அணிக்கு திரும்புவார்களா இல்லை ஆர்ஸ்தீப் சிங், முகேஷ் குமாரை வைத்து தான் இந்தியா டி20 கிரிக்கெட்டின் டெத் பவுலிங்கை சமாளிக்க வேண்டுமா? என்ற கேள்விக்கும் இன்னும் விடை தெரியவில்லை. இப்படி பல கேள்விகளுக்கு இந்தியா இன்னும் ஐந்து டி20 போட்டிகளில் பதில் கண்டுபிடித்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.