அகமதாபாத்: இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடரின் 5வது போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. லக்னோவில் நடக்கவிருந்த 4வது போட்டி புகை கலந்த பனிமூட்டத்தால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஐந்தாவது போட்டி நடைபெற உள்ளது.
தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வென்றால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றும். அதேசமயம், தொடரை 2-2 என சமன் செய்ய தென்னாப்பிரிக்காவுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. இந்தப் போட்டி நடைபெற உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி இருக்கும்? இந்தப் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா? லக்னோ அளவிற்கு பனிமூட்டம் இருக்குமா? என்று பார்க்கலாம்.

அகமதாபாத் மைதானம் என்றாலே பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு கொண்டாட்டம் தான். இங்குள்ள ஆடுகளங்கள் டி20 கிரிக்கெட்டில் ரன் வேட்டையை ஊக்குவிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஆடுகளம் கடினமாகவும், பந்து பேட்டிற்கு சீராகவும் வரும். இதனால் பேட்ஸ்மேன்கள் பயமின்றி பெரிய ஷாட்களை ஆடலாம். நேரான பவுண்டரிகள் சற்று சிறியது. ஆனால் ஸ்கொயர் பவுண்டரிகள் பெரியது. எனவே, 'வி' (V) வடிவில் ஆடுவதன் மூலம் எளிதாக ரன் குவிக்கலாம்.
இங்கு சுழற்பந்து வீச்சாளர்களை விட, வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். புள்ளிவிவரப்படி இந்த மைதானத்தில் 77% விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியுள்ளனர். கட்டர்ஸ் மற்றும் ஸ்லோவர் பால்கள் இங்கு எடுபடும்.
அகமதாபாத்தில் போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பே இல்லை. வானம் தெளிவாக இருக்கும். வெப்பநிலை பகலில் 30-32 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும். போட்டி நடைபெறும் நேரத்தில் 15-18 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்பதால் போட்டிக்கு எந்த தடங்கலும் இருக்காது.
பனிப்பொழிவு: இங்கு லக்னோ அளவிற்கு பனிமூட்டம் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. இது இரவு நேரப் போட்டி என்பதால், இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும். பந்து ஈரமாகிவிட்டால் பவுலர்களுக்கு கிரிப் கிடைப்பது கடினம். இதனால் சேஸிங் செய்வது சற்று எளிதாக இருக்கலாம்.
இங்கு இதுவரை நடந்த 7 டி20 போட்டிகளிலும், டாஸ் வென்ற அணியே போட்டியை வென்றுள்ளது என்பது ஆச்சரியமான புள்ளிவிவரம். டாஸ் வெல்லும் கேப்டன் பனிப்பொழிவை மனதில் வைத்து பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
இந்தியா இந்த மைதானத்தில் இதுவரை 5 டி20 போட்டிகளில் ஆடியுள்ளது. 5-லிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தோல்வியே சந்திக்காத கோட்டை இது. துணை கேப்டன் சுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கு அடித்த 126* ரன்கள் தான் இந்த மைதானத்தின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்.
இந்தியா:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சிவ துபே, ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.
தென்னாப்பிரிக்கா:
ரீசா ஹென்ட்ரிக்ஸ், குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டெவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரீரா, மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், லுங்கி இங்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்.