Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: "தயவுசெய்து இங்க மேட்ச் வைக்காதீங்க".. ராசியே இல்லாத மைதானம்.. குமுறிய ரசிகர்கள்

அகமதாபாத்: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை பெற்ற அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டித் தோல்வியின் வடு இன்னும் எட்டிப்பார்க்கும் நிலையில், தற்போது 2026 டி20 உலகக்கோப்பையிலும் இந்திய அணி அங்கு படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இந்த மைதானம் இந்திய அணிக்கு 'ராசியில்லாத மைதானமாக' மாறிவிட்டதோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மறக்க முடியாத 2023 இறுதிப்போட்டி

கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒன்று. தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் 10 வெற்றிகளுடன் வந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது.

சுமார் 92,000 ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா வெறும் 240 ரன்களுக்குச் சுருள, டிராவிஸ் ஹெட்டின் சதத்தால் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது மைதானமே மயான அமைதியில் மூழ்கியது. கடினமான நேரத்தில் வீரர்களுக்கு ஊக்கமளிக்காமல், ரசிகர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தது அப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

IND vs SA Ahmedabad Narendra Modi Stadium Tagged Unlucky by Fans After India s Loss to South Africa

மீண்டும் ஒலித்த அபாய மணி

தற்போது 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் வரலாறு திரும்பியுள்ளது. லீக் சுற்றில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த இந்தியா, சூப்பர் 8 சுற்றில் அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங்கில் மொத்தமாகச் சொதப்பிய இந்தியா 111 ரன்களில் சுருண்டு, 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வி மூலம் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் 12 போட்டிகள் கொண்ட தொடர் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.

அகமதாபாத் மைதானத்தில் முக்கியப் போட்டிகள் நடந்தாலே இந்தியா தோற்றுவிடுகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். "இந்த மைதானம் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாதது. தயவுசெய்து முக்கியமான நாக்-அவுட் போட்டிகளை மும்பை வான்கடே, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் அல்லது சென்னை சேப்பாக்கம் போன்ற பாரம்பரிய மைதானங்களுக்கு மாற்றுங்கள்" என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமைதியாகும் கூட்டம்

மும்பை அல்லது சென்னை போன்ற மைதானங்களில் இந்திய அணி சரிவைச் சந்திக்கும் போது, ரசிகர்கள் தொடர்ந்து களத்தில் இருக்கும் வீரர்களின் பெயர்களை கூறியும், கரகோஷம் எழுப்பியும் வீரர்களுக்கு ஊக்கமளிப்பார்கள். ஆனால், அகமதாபாத் மைதானத்தில் விக்கெட்டுகள் விழத் தொடங்கினால் ஒட்டுமொத்த மைதானமும் அமைதியாகி விடுகிறது.

90,000 பேர் அமர்ந்திருந்தாலும், இந்திய அணி சரிவைச் சந்திக்கும் போது மைதானத்தில் ஏற்படும் அமைதி வீரர்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 2023 இறுதிப்போட்டியில் ரசிகர்கள் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதும், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அதே போன்ற சூழல் நிலவியதும் ரசிகர்களை வெறுப்படையச் செய்துள்ளது.

அடுத்தது என்ன?

இந்தத் தோல்வி இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பைச் சிக்கலாக்கியுள்ளது. ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அது மீண்டும் அகமதாபாத்தில் நடக்கும் என்பதால் இப்போதே ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். மைதானத்தின் பிரம்மாண்டத்தை விட, அணியின் வெற்றியே முக்கியம் என்பதே ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Story first published: Monday, February 23, 2026, 9:32 [IST]
Other articles published on Feb 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+