விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் கலக்கி வரும் கே.எல்.ராகுலை, தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். "அணிக்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்கிறார்" என்று ஸ்டெயின் புகழாரம் சூட்டியுள்ளார். ராகுல் துவக்க வீரராக இறங்கினால் நிச்சயம் சதம் அடிப்பார். ஆனாலும், மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளார் என்றார் ஸ்டெயின்.
சுப்மன் கில் இல்லாத நிலையில் தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ராகுல், பேட்டிங் வரிசையில் தனக்கான இடத்தை விட்டுக்கொடுத்து, அணியின் தேவைக்காகக் கீழே இறங்கி ஆடி வருகிறார்.

ஹர்திக் பாண்டியா இல்லாததால் இந்திய அணியில் ஒரு சிறந்த 'பினிஷர்' இல்லை என்ற குறை இருந்தது. அந்தப் பொறுப்பைத் தற்போது கே.எல்.ராகுல் ஏற்றுள்ளார். ராஞ்சி போட்டியில் 60 பந்துகளில் 56 ரன்களும், ராய்ப்பூர் போட்டியில் 43 பந்துகளில் 66 ரன்களும் விளாசி, இக்கட்டான நேரங்களில் அணியைத் தாங்கிப் பிடித்துள்ளார். மொத்தம் இரண்டு போட்டிகளில் 126 ரன்கள் குவித்து, தான் எந்த இடத்திலும் ஆட வல்லவர் என்பதை நிரூபித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய டேல் ஸ்டெயின், ராகுலின் இந்தத் தியாகத்தையும் திறமையையும் சுட்டிக்காட்டிப் பேசினார். "கே.எல். ராகுலுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று நன்றாகத் தெரியும். அவர் ஒருவேளை ஓப்பனிங் இடத்திலோ அல்லது 3-வது இடத்திலோ இறங்கியிருந்தால், நிச்சயம் அவர் சதம் அடித்திருப்பார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த இடங்கள் (டாப் ஆர்டர்) மற்றவர்களுக்கானவை என்பது அவருக்குத் தெரியும்.
அணியில் தனது பணி என்ன என்பதை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார். அதனால்தான் இரண்டு போட்டிகளிலும் மிகச் சிறப்பான இன்னிங்ஸை ஆடியுள்ளார்" என்று ஸ்டெயின் பாராட்டினார்.
மேலும் பேசிய அவர், "ராகுல் ஒரு கேப்டனாகவும் அணியை நன்றாக வழிநடத்துகிறார். முதல் போட்டியில் அணியை வெற்றி பெற வைத்தார். இரண்டாவது போட்டியில் ஜடேஜாவுடன் ஆடியபோது, ஆட்டத்தின் போக்கை அறிந்து நிதானமாகவும், தேவைப்படும்போது அதிரடியாகவும் ஆடினார். பினிஷிங் ரோலில் அவர் முதிர்ச்சியுடன் செயல்படுகிறார்" என்று கூறினார்.