Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: பந்தை பவுண்டரிக்கு போக விட்டு வேடிக்கை பார்த்த சீனியர் வீரர்.. கடுப்பான குல்தீப் யாதவ்

கவுஹாத்தி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜஸ்பிரித் பும்ராவின் மந்தமான ஃபீல்டிங்கால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அதிருப்தி அடைந்த சம்பவம் அரங்கேறியது. பின்னர் அதை சமாளிக்கும் வகையில் தனது துல்லியமான பந்துவீச்சால் விக்கெட் வீழ்த்தி பும்ரா, இந்திய அணிக்குத் தேவையான திருப்பத்தை அளித்தார்.

ஈடன் கார்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய இந்திய அணி, தொடரைச் சமன் செய்யும் கட்டாயத்தில் கவுஹாத்தியில் களமிறங்கியுள்ளது. ஆனால், போட்டியின் ஆரம்பமே இந்திய அணிக்குச் சவாலாக அமைந்தது.

IND vs SA Guwahati Test Day 1 Bumrah s Slow Fielding Sparks Kuldeep Yadav Anger

குல்தீப் யாதவ் கோபம்

தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான எய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் விக்கெட் இழப்பின்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

இந்நிலையில், ஆட்டத்தின் 23-வது ஓவரை வீச சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தை ரியான் ரிக்கல்டன் மிட்-ஆன் திசையில் அடித்தார். அங்கு நின்று கொண்டிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பந்தைத் தடுக்க 'டைவ்' அடிக்க முயற்சி செய்யவில்லை. இதனால் பந்து எளிதாக பவுண்டரி எல்லைக்கோட்டைத் தொட்டது.

நெருக்கடியான நேரத்தில் பும்ரா இவ்வாறு மெத்தனமாகச் செயல்பட்டதைக் கண்டு குல்தீப் யாதவ் கடும் அதிருப்தி அடைந்தார். களத்திலேயே தனது விரக்தியை அவர் வெளிப்படுத்தியது கேமராக்களில் பதிவானது. முதல் விக்கெட்டை வீழ்த்தப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், மூத்த வீரரான பும்ராவிடமிருந்து இத்தகைய பிழை நிகழ்ந்தது ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஃபீல்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் பும்ரா தனது மேஜிக்கைக் காட்டத் தவறவில்லை. மதிய உணவு இடைவேளைக்குச் சற்று முன்பு மீண்டும் பந்துவீச வந்த பும்ரா, சிறப்பாக விளையாடி வந்த எய்டன் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தினார். பும்ரா வீசிய பந்து பேட்டின் உள் விளிம்பில் பட்டு ஸ்டம்புகளைத் தகர்த்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. இது இந்திய அணிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய உடனே, குல்தீப் யாதவ் தனது சுழல் வித்தையை காட்டினார். அவர் வீசிய பந்து தாழ்வாகச் சென்று ரியான் ரிக்கல்டனின் பேட்டில் பட்டு 'எட்ஜ்' ஆனது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தாழ்வாக வந்த அந்தக் கேட்சை பிடித்தார். இதன் மூலம் அடுத்தடுத்த இடைவெளிகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா.

முன்னதாக, இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படவிருந்த சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக இப்போட்டியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக அணியை வழிநடத்தினார். சுப்மன் கில் இல்லாததால், சாய் சுதர்சன் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார். மேலும், அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அக்சர் படேலுக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Saturday, November 22, 2025, 14:26 [IST]
Other articles published on Nov 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+