நியூலாண்ட்ஸ்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கேப் டவுனில் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒருமுறை கூட வெற்றிபெற்றதில்லை என்ற தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று கேப் டவுனில் தொடங்கவுள்ளது. சென்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

1992ஆம் ஆண்டு முதல் இதுவரை 9வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டும் இந்திய அணியால் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்ல முடிந்ததில்லை. தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மட்டும் தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய முடிந்தது.
இந்த நிலையில் மீண்டும் இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்டம் கேப் டவுன் மைதானத்தில் நடப்பதால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனென்றால் இதுவரை கேப் டவுன் மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள 6 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற்றதில்லை.
முதல்முறையாக 1992ஆம் ஆண்டு பயணித்த இந்திய அணி கேப் டவுனில் விளையாடிய டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. அதன்பின் 1997ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது கேப் டவுனில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் 282 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மீண்டும் 2007ஆம் ஆண்டு கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அதேபோல் தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு கேப் டவுனில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்தது. பின்னர் 2018ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதேபோல் 2022ஆம் ஆண்டு விராட் கோலி கேப்டனாக பொறுப்பு வகித்த கடைசி டெஸ்ட் போட்டியும் கேப் டவுனில் நடைபெற்றது. அந்த போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
6 முறை கேப் டவுன் மைதானத்தில் விளையாடியுள்ள இந்திய அணி 2 முறை டிரா மற்றும் 4 முறை தோல்வியை கண்டுள்ளது. முதல்முறையாக இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடவுள்ள நிலையில், கேப் டவுன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்று புதிய வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.