டர்பன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் பங்கேற்கவுள்ளது. இதில் முதலில் டி20 தொடர் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை தொடர்ந்து இந்திய அணி மீண்டும் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் முதல் டி20 போட்டி டர்பம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

டர்பன் வானிலை கொஞ்சம் மேகமூட்டத்துடன் இருப்பதால், ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. சரியாக டாஸ் போடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் மழை பெய்த நிலையில், மைதானம் தார்பாய் மூலமாக மூடப்பட்டது. ஏற்கனவே டி20 போட்டியின் போது மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து 40 நிமிடங்களுக்கு பின் நடுவர்களால் ஆலோசிக்கப்பட்ட நிலையில், டர்பனில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் 9.25 மணிக்கு நடுவர்கள் மீண்டும் குடையுடன் மைதானத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அதன் பின் இரு அணிகளின் கேப்டன்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டாஸ் கூட போடாமலேயே ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றிபெறும் அணியே தொடரை வெல்ல முடியும்.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி முகாமிடவுள்ள நிலையில், முதல் போட்டியே கைவிடப்பட்டுள்ளது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் ரசிகர்கள் வானிலை நிலவரத்தை சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.