IND vs SA: கம்பீர் ஏன் இப்படி முடிவு எடுத்தார் என்று எனக்கே தெரியாது.. நான் கேப்டன் கிடையாது-பும்ரா
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த உடன் செய்தியாளர்களை சந்திக்க பும்ரா வந்தார்.
அப்போது அவரிடம் நம்பர் மூன்றாவது வீரராக வாஷிங்டன் சுந்தர் களம் இறக்கப்பட்டது ஏன்? இதற்குப் பின்னால் அணி நிர்வாகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பது குறித்து கேட்டனர் .ஆனால் இதற்கு பும்ரா நகைச்சுவையாக பதில் அளித்து கலகலப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தமக்கு இதுபோன்ற முடிவுகள் எடுக்கும் போது எந்த ஒரு முக்கியத்துவமும் தரவில்லை என்பதை மறைமுகமாக அவர் சாடியிருந்தார். இது குறித்து பேசிய அவர், அணியில் கேப்டனாக நான் தற்போது இல்லை. ஆனால் இதற்குப் பின்னால் ஏதேனும் காரணம் இருந்திருக்கும். இதனால் அணியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உங்களை சந்திக்க வந்தால் அவர்களிடம் கேளுங்கள்.
இதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது. இதை எப்படி முடிவு செய்தார்கள் என்று எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் என்னை பொறுத்தவரை நாங்கள் அனைத்து வீரர்களும் அவர்களுடைய பணியை செய்ய முழு ஆதரவை தருகின்றோம். இந்த விஷயத்தில் உண்மையிலேயே என்ன உரையாடல் நடந்தது என்பது குறித்து எனக்கு சுத்தமாக தெரியாது.
பந்து கரடு முரடாக இருக்கும் போது பேட்ஸ்மேன் விட்டு அகன்று செல்கிறது. ஆனால் பந்து மிதமானதாக மாறியவுடன் அது நேரடியாக பேட்ஸ்மேனை நோக்கி செல்கிறது. எனவே துல்லியமாக பந்து வீசினால் மட்டுமே நாம் எதிர்பார்த்தபடி விக்கெட் எடுக்க முடியும்.முதலில் நான் பந்து வீசும் போதே எந்த லெந்தில் வீசவேண்டும் என்ற குழப்பம் இருந்தது.
நான் எந்தவிதமான கிரிக்கெட்டில் விளையாடுகிறேனோ, அந்தப் போட்டியில் என்னுடைய நூறு சதவீதத்தை வழங்குவேன். எனக்கு ஓய்வு தாருங்கள் என்றெல்லாம் நான் கேட்பது கிடையாது. என்னால் முடிந்தவரை நான் விளையாடுகிறேன். அதேசமயம் என்னுடைய உடல் தகுதியும் நான் கவனித்துக் கொள்கிறேன். யாரெல்லாம் விளையாட விருப்பம் உள்ளதோ அவர்கள் விளையாடட்டும்.
அணிக்காக என்னால் பங்களிக்க முடிகிறது அதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். ஒவ்வொரு முறையும் புதிய விஷயங்களை நான் கற்றுக் கொள்கின்றேன். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை பொறுமை என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு முறையும் மேஜிக் பந்தை வீச வேண்டும் என்று முயற்சித்தால் நிச்சயம் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பார்கள். எனவே அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று பும்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications