சண்டிகர்: உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்று போற்றப்படும் ஜஸ்பிரித் பும்ரா, தனது டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக மிக மோசமான ஒரு சாதனையைப் படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், அவர் பந்துவீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் நாலாபுறமும் சிதறடித்து, அவருக்கு ஒரு மறக்க முடியாத கசப்பான அனுபவத்தைக் கொடுத்துள்ளனர்.
பொதுவாக பும்ரா பந்துவீசினால் ரன் எடுக்கவே பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். ஆனால், முல்லன்பூரில் நடந்த போட்டியில் கதை தலைகீழாக மாறியது. தென்னாப்பிரிக்க வீரர்கள் அவரது பந்துவீச்சில் எளிதாக சிக்ஸர்கள் அடித்தனர்.

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ஜஸ்பிரித் பும்ரா எத்தனையோ போட்டிகளில் விளையாடியிருந்தாலும், ஒரு இன்னிங்ஸில் 4 சிக்ஸர்களை விட்டுக்கொடுத்ததே இல்லை. ஆனால், நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சில் 4 இமாலய சிக்ஸர்களை விளாசித் தள்ளினர்.
பும்ராவின் டி20 வாழ்வில் ஒரு இன்னிங்ஸில் 4 சிக்ஸர்களை வாங்குவது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில் தான் மூன்று வடிவங்களிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். ஆனால் அடுத்த போட்டியிலேயே அவருக்கு இப்படி ஒரு சறுக்கல் நேர்ந்துள்ளது.
முதல் ஓவர்: பும்ரா வீசிய முதல் ஓவர் அமைதியாகவே சென்றது. வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
இரண்டாவது ஓவர்: ஆனால், இரண்டாவது ஓவரில் குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ரிக்ஸ் தலா ஒரு சிக்ஸர் விளாசினர். அந்த ஓவரில் 16 ரன்கள் கசிந்தது.
மூன்றாவது ஓவர்: கடைசிக்கட்ட ஓவர்களை வீச வந்த பும்ராவை, டேவிட் மில்லர் மற்றும் டோனோவன் ஃபெரீரா குறிவைத்தனர். அவர் வீசிய ஆட்டத்தின் 18-வது ஓவரில் மில்லர் பவுண்டரிகள் அடிக்க 15 ரன்கள் சென்றது.
நான்காவது ஓவர்: 20-வது ஓவரை வீசிய பும்ராவுக்கு ஃபெரீரா சரமாரியாக இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். மொத்தத்தில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா, விக்கெட் எதுவும் எடுக்காமல் 45 ரன்களை வாரி வழங்கினார்.
பும்ரா 45 ரன்களைக் கொடுத்தார் என்றால், அர்ஷ்தீப் சிங் 54 ரன்களைக் கொடுத்து அவரை விட மோசமாகச் செயல்பட்டார். இந்திய அணியின் இரண்டு முக்கியத் பந்துவீச்சாளர்களும் சரிந்ததால், தென்னாப்பிரிக்கா 213 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இறுதியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இது பும்ராவுக்கு ஒரு மோசமான நாள் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில் 82 போட்டிகளில் விளையாடியுள்ள அவரது எகானமி ரேட் இன்னும் 6.42 என்ற அளவில் சிறப்பாகவே உள்ளது. அடுத்த போட்டியில் அவர் பழைய பும்ராவாகத் திரும்பி வருவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.