விசாகப்பட்டினம்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினாலும், டிஆர்எஸ் (DRS) கேட்பதில் அவர் செய்த அட்ராசிட்டியும், அதை ரோஹித் சர்மா தடுத்த விதமும் மைதானத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. கேப்டன் கே.எல்.ராகுல் அமைதியாக இருக்க, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் குல்தீப்பை அதட்டி அனுப்பிய சம்பவம் பரவி வருகிறது.
விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழ்வா? சாவா? ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 270 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின் 43 முதல் 45-வது ஓவர்களுக்கு இடையில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது.

அந்த சமயத்தில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது வரிசையாக மூன்று முறை டிஆர்எஸ் கேட்க முயன்றார் குல்தீப் யாதவ்.
முதல் முறை: 43-வது ஓவரின் கடைசி பந்துக்கு முந்தைய பந்தில், குல்தீப் வீசிய பந்து இங்கிடியின் காலில் பட்டது. உடனே குல்தீப் எல்பிடபிள்யூ கேட்டு முறையிட்டார். அம்பயர் அவுட் தரவில்லை. உடனே கேப்டன் ராகுலிடம் ஓடிய குல்தீப், "ரிவ்யூ எடுங்க.. இன்னும் ரெண்டு ரிவ்யூ இருக்கு" என்று கெஞ்சினார்.
அப்போது ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மா, குல்தீப்பை பார்த்து கையசைத்து, "நீ முதல்ல பவுலிங் போட போ.. இதுக்கெல்லாம் ரிவ்யூ எடுக்க முடியாது" என்று விரட்டினார். ஆனாலும் குல்தீப் நகராமல் நிற்க, ரோஹித் சத்தமாக, "என்ன? கால்ல பட்டாலே அவுட்னு நெனச்சிட்டியா?" என்று கேட்டு கலாய்த்தார்.
இரண்டாவது முறை: அடுத்த ஓவரிலேயே மீண்டும் பந்து காலில் பட, குல்தீப் மீண்டும் ரிவ்யூ கேட்டார். இம்முறை ரோஹித் சர்மாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கேப்டன் ராகுலும் சிரித்துக்கொண்டே அந்தப் பக்கம் சென்றுவிட்டார். மிட்-விக்கெட்டில் நின்றிருந்த விராட் கோலியும் குல்தீப்பை பார்த்துச் சிரித்து மகிழ்ந்தார்.
மூன்றாவது முறை: 45-வது ஓவரிலும் இதே கதை தொடர்ந்தது. ஆனால் ரோஹித் உறுதியாக மறுத்துவிட்டார். ரீப்ளேவில் பார்த்தபோது ரோஹித் சொன்னதுதான் சரி என்று தெரிந்தது. அந்த மூன்று முறையும் நாட்-அவுட் தான்.
ரோஹித் திட்டிய பிறகு, அடுத்த பந்திலேயே குல்தீப் யாதவ், இங்கிடியை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். இம்முறை அம்பயரே அவுட் கொடுத்துவிட்டார். தென்னாப்பிரிக்கா ரிவ்யூ எடுத்தாலும் அது அவுட் என்று உறுதியானது. இதன் மூலம் குல்தீப் தனது 4-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இன்னிங்ஸ் இடைவேளையில் பேசிய குல்தீப், "டிஆர்எஸ் விஷயத்தில் நான் ரொம்ப வீக். பந்து பேடில் பட்டாலே அவுட் என்று நினைத்துவிடுவேன். ரோஹித் பாய் என்னை எப்போதும் கலாய்த்துக்கொண்டே இருப்பார். ரோஹித் மற்றும் ராகுல் போன்றவர்கள் களத்தில் இருப்பது என்னை அமைதிப்படுத்த உதவுகிறது" என்று ஒப்புக்கொண்டார்.
போட்டியில் குல்தீப் யாதவ் 41 ரன் கொடுத்து 4 விக்கெட் மற்றும் பிரசித் கிருஷ்ணா 66 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்காவை 270 ரன்களுக்குள் சுருட்டினர். டி காக் மட்டும் 106 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.