மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடினர். இந்த போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு மொத்தமாக அந்த தொடரில் 202 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
இதனால் அவர் சிறிது காலம் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தார். இதேபோன்று விராட் கோலி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் ஆன நிலையில், கடைசி ஒரு நாள் போட்டியில் 81 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த போட்டி அக்டோபர் 25ஆம் தேதி நடந்தது தற்போது ஒரு மாதம் ஆன நிலையில், மீண்டும் இருவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளனர். அதுவும் சொந்த மண்ணில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளதால், இருவரும் பல மாதங்கள் கழித்து விளையாட இருக்கின்றனர்.
இதன் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். ரோகித் சர்மா தற்போது பெங்களூரில் உள்ள பிசிசிஐ செயல்திறன் அலுவலகத்தில் தங்கி பயிற்சி எடுத்து வருகிறார். விராட் கோலி வழக்கம் போல் ஆப்லைனுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த உடன் ஒரு நாள் தொடருக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விடும்.
இதில் விராட் கோலி,ரோஹித் சர்மா ஆகியோர் ராஞ்சிக்கு நவம்பர் 27ஆம் தேதி சென்று பயிற்சியை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடர் முடிவடைந்த உடன் மீண்டும் ஒரு மாதம் கழித்து தான் அடுத்த ஒரு நாள் தொடர் நியூசிலாந்துக்கு எதிராக தொடங்குகிறது.
விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி வருவதால் அவர்கள் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் போது கடும் நெருக்கடியுடன் விளையாடுகிறார்கள். ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர்களுக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதே நெருக்கடியுடன் தான் இருவரும் களத்திற்கு திரும்புகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் செயல்பட்டது போல் சொந்த மண்ணிலும் செயல்பட்டால், இந்த இரண்டு வீரர்களுக்கும் எந்த ஒரு சிக்கலும் இருக்காது. ஒரு மாதம் கழித்து இருவரையும் பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரோகித் சர்மா 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 806 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் மூன்று சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 33 என்ற சராசரியை ரோகித் சர்மா வைத்திருக்கிறார். இதேபோன்று விராட் கோலி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 31 போட்டியில் விளையாடி 1504 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் ஐந்து சதம், எட்டு அரை சதம் அடங்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கோலியின் சராசரி 65 என்று அளவில் இருக்கின்றது.