சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகிய நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 2வது நாளில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்களை சேர்த்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் 140 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 3வது நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி உணவு இடைவேளைக்கு பின்னரும் பேட்டிங்கை தொடர்ந்தது. இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 408 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய டீன் எல்கர் 186 ரன்களும், கடைசி வரை களத்தில் இருந்த மார்கோ யான்சன் 84 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 163 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனால் 2வது இன்னிங்ஸில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு ஏற்பட்டது. இதற்காக இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா 5 ரன்களும், ஜெய்ஸ்வால் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், 2வது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மிகப்பெரிய முன்னிலை எடுத்த உற்சாகத்துடன் ரபாடா பந்தை தாறுமாறாக பேட்ஸ்மேனுக்கு உள்ளே கொண்டு வந்தார். 3வது ஓவரின் போது ரோகித் சர்மாவுக்கு 2 லெந்த் பந்தை வீசிய ரபாடா, அடுத்த பந்தை கொஞ்சம் ஃபுல்லர் லெந்தில் வீசி உள்ளே திருப்பினார். இதனால் ஏமாந்த ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ஜெய்ஸ்வாலும் 5 ரன்களில் பர்கர் பந்தில் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வெளிநாடுகளில் ரோகித் சர்மா எப்போதும் திணறி வரும் சூழலில், போதிய அனுபவத்திற்கு பின்னரும் இப்படி பொறுப்பின்றி ஆடி ஆட்டமிழப்பது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.