IND vs SA: "இதை சாப்பிட்டா மறுபடியும் குண்டாயிடுவேன்".. மேட்ச் முடிந்ததும் ரோஹித் சொன்னது என்ன?
விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றிய கொண்டாட்டத்தின் போது, கேப்டன் ரோஹித் சர்மா கேக் சாப்பிட மறுத்துச் சொன்ன காரணம் ரசிகர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது. "இதைச் சாப்பிட்டால் நான் மீண்டும் குண்டாகிவிடுவேன்" என்று அவர் கூறிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டலில் கேக் வெட்டிக் கொண்டாட்டம் நடைபெற்றது.

அப்போது, நேற்றைய போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆசையாக ஒரு துண்டு கேக்கை எடுத்து ரோஹித் சர்மாவுக்கு ஊட்ட முயன்றார். ஆனால், ரோஹித் சர்மா அதைச் சாப்பிட மறுத்துவிட்டார். ஜெய்ஸ்வாலிடம் அவர், "இல்ல தம்பி வேண்டாம்.. சாப்பிட்டா நான் மறுபடியும் குண்டாயிடுவேன்" என்று ஜாலியாகக் கூறி மறுத்துவிட்டார்.
பொதுவாக விராட் கோலி தான் ஃபிட்னஸ் விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். ஆனால், இந்த வீடியோவில் விராட் கோலி கேக்கை வாங்கிச் சாப்பிடுவதையும், ரோஹித் சர்மா டயட்டில் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதையும் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். ரோஹித் தனது உடல் தகுதியில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
20,000 ரன்கள் - இமாலய சாதனை
நேற்றைய போட்டியில் 75 ரன்கள் குவித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற வரலாற்றை ரோஹித் சர்மா படைத்தார்.
20,000 ரன்களைக் கடந்த இந்திய ஜாம்பவான்கள்:
சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள்
விராட் கோலி - 27,910 ரன்கள்
ராகுல் டிராவிட் - 24,208 ரன்கள்
ரோஹித் சர்மா - 20,048 ரன்கள்
ஒட்டுமொத்தமாக உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 14-வது வீரர் ரோஹித் ஆவார். ஏபி டி வில்லியர்ஸை (20,014 ரன்கள்) பின்னுக்குத் தள்ளி ரோஹித் (20,048 ரன்கள்) முன்னேறியுள்ளார்.
வார்னர் சாதனை சமன்
இதுதவிர, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் (63 சிக்ஸர்கள்) அடித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனை ரோஹித் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications