ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், போட்டி முடிந்த பிறகு டிரெஸ்ஸிங் ரூமில் ரோஹித் சர்மா மற்றும் கவுதம் கம்பீர் இடையே நடந்த ஒரு காரசாரமான விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் ஏதோ சொல்ல, அதற்கு ரோஹித் சர்மா தலையை ஆட்டி மறுக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ராஞ்சியில் நடந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனைவரும் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், கேமராக்களின் கண்கள் டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்பின.

போட்டி முடிந்த சிறிது நேரத்தில், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் நீண்ட நேரம் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். இது சாதாரண உரையாடல் போலத் தெரியவில்லை. இருவரும் மிகவும் சீரியஸான முகபாவனையுடன் காணப்பட்டனர்.
அந்த வீடியோவில், கம்பீர் ஏதோ ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூறுவது போலவும், அதைக் கேட்ட ரோஹித் சர்மா, "இல்லை.. முடியாது" என்பது போலத் தனது தலையை இட வலமாக ஆட்டி மறுப்பு தெரிவிப்பது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ரோஹித் மறுப்பு தெரிவித்த பிறகு, கம்பீர் மீண்டும் தனது கருத்தை முன்வைக்கிறார். பின்னர் ரோஹித் தனது தரப்பு விளக்கத்தைக் கொடுக்கிறார்.
இந்த உரையாடல் எதைப் பற்றியது என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், ரோஹித்தின் அந்த உடல் மொழி விவாதம் காரசாரமாக இருந்ததையே காட்டுகிறது. இது பேட்டிங் அல்லது போட்டியில் நடந்த நிகழ்வு பற்றியதா? அல்லது ரோஹித், கோலியின் எதிர்காலம் பற்றியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே ரோஹித் மற்றும் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவர்களின் ஒருநாள் போட்டி எதிர்காலம் பற்றி, 2027 உலகக்கோப்பை வரை அவர்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்களா? என்பது குறித்து பெரிய விவாதங்கள் நடந்து வருகின்றன. பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விரைவில் இது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இந்தச் சூழலில், கம்பீர் - ரோஹித் இடையிலான இந்த காரசார விவாதம், அணியின் எதிர்காலத் திட்டம் குறித்தோ அல்லது ரோஹித்தின் ரோல் குறித்தோ இருக்கலாம் என்று ரசிகர்கள் ஊகிக்கின்றனர். இந்தப் போட்டிக்கு இடையே நல்ல தருணங்களும் நடந்தன. ரோஹித் சர்மா அரைசதம் அடித்தபோது கம்பீர் எழுந்து நின்று கைதட்டினார்.
அதேபோல விராட் கோலி சதம் அடித்துவிட்டு உள்ளே வந்தபோது, கம்பீர் அவரைக் கட்டியணைத்துப் பாராட்டினார். ஆனால், போட்டி முடிந்த பிறகு ரோஹித் தலையாட்டி மறுத்த அந்த காட்சி மட்டும் தற்போது மர்மமாகவே உள்ளது. அடுத்த போட்டி ராய்ப்பூரில் புதன்கிழமை (டிசம்பர் 3) நடைபெறவுள்ளது. அப்போது பிசிசிஐ நிர்வாகிகள் கம்பீரை சந்தித்து ரோஹித், கோலி குறித்து பேச உள்ளதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.