IND vs SA: கோலி செஞ்சுரி அடித்ததும் ரோஹித் செய்த செயல்.. அந்த வார்த்தையை சொன்னாரா? என்ன நடந்தது?
ராஞ்சி: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தபோது, டிரஸ்ஸிங் ரூம் பால்கனியில் இருந்து ரோஹித் சர்மா வெளிப்படுத்திய ஆக்ரோஷமான வார்த்தை இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. விராட் கோலியின் சாதனையைத் தனது சாதனையாக எண்ணி ரோஹித் கொண்டாடினார் என்றாலும் அவர் பயான்படுத்திய வார்த்தை ரசிகர்களிடம் பரவி வருகிறது.
ராஞ்சியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 135 ரன்கள் குவித்து தனது 52-வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். விராட் கோலி தனது சதத்தை எட்டிய அந்த வினாடி, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்ல, டிரஸ்ஸிங் ரூம் பால்கனியில் அமர்ந்திருந்த ரோஹித் சர்மாவும் உணர்ச்சிவசப்பட்டார்.

57 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளே சென்றிருந்த ரோஹித், கோலி சதம் அடித்ததும் இருக்கையை விட்டு துள்ளி எழுந்தார். மிகுந்த ஆக்ரோஷத்துடன் கையை மடக்கி காற்றில் குத்திய ரோஹித் சர்மா, வட இந்திய வீரர்கள் வழக்கமாக ஆக்ரோஷத்தில் பயன்படுத்தும் கெட்ட வார்த்தையைச் சத்தமாக கத்தினார். பின்னர் முகத்தில் பெரிய புன்னகையுடன் நீண்ட நேரம் கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பொதுவாக விராட் கோலி தான் இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். ஆனால், தனது நண்பனின் வெற்றியை ரோஹித் சர்மா அதே ஆக்ரோஷத்துடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "இவர்களுக்குள் ஈகோ இருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த வீடியோவை பாருங்கள்" என்று ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
இந்த சதத்தின் மூலம் விராட் கோலி ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டின் ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி: ஒருநாள் போட்டிகளில் 52 சதங்கள் அடித்து அதை உடைத்துள்ளார். இந்த போட்டியில் ரோஹித் மற்றும் கோலி ஜோடி 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் சங்கக்கரா - தில்ஷன் ஜோடியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். ரோஹித் - கோலி இணைந்து 5619 ரன்கள் குவித்துள்ளனர்.
மேலும், இருவரும் இணைந்து 20 முறைக்கு மேல் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளனர். ரோஹித் மற்றும் கோலி ஆகிய இரு ஜாம்பவான்களும் 37 மற்றும் 38 வயதிலும் களத்தில் காட்டும் வேகம் இளம் வீரர்களுக்கு ஒரு பாடம் என்று சொன்னால் மிகையல்ல.


Click it and Unblock the Notifications