IND vs SA: கோலி முன் ருதுராஜ் செய்த செயல்.. 25 பந்தில் 50 ரன்.. தெறிக்க விட்ட சிஎஸ்கே கேப்டன்
ராய்ப்பூர்: ராய்ப்பூரில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். விராட் கோலியுடன் இணைந்து ஜோடி சேர்ந்த அவர், தனது முதல் ஒருநாள் சதத்தை அதிவேகமாகப் பதிவு செய்து மிரட்டியுள்ளார்.
முதல் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ருதுராஜ், இந்த போட்டியில் அந்தத் தவறைத் திருத்திக்கொண்டு ஆக்ரோஷமாக விளையாடினார்.

25 பந்துகளில் 50 ரன்கள்!
தொடக்கத்தில் மார்கோ யான்சன் பந்துவீச்சில் சற்றுத் திணறினாலும், நிதானமாக இன்னிங்ஸை கட்டமைத்தார் ருதுராஜ். தனது முதல் அரைசதத்தை எட்ட அவர் 52 பந்துகளை எடுத்துக்கொண்டார். ஆனால், அரைசதம் அடித்த பிறகு ஆட்டம் அதிரடியானது.
அடுத்த 50 ரன்களை அவர் அடித்த வேகம் தான் ஹைலைட். வெறும் 25 பந்துகளில் அடுத்த 50 ரன்களை விளாசி, 77-வது பந்தில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். 52-வது பந்தில் இருந்து 77-வது பந்து வரை அவர் ஆடிய ஆட்டம் டி20 அதிரடி ஆட்டம் போல இருந்தது.
34-வது ஓவரில் கார்பின் போஷ் வீசிய பந்தை மிட்-ஆன் திசையில் பவுண்டரிக்கு விரட்டி, 77 பந்துகளில் தனது முதல் ஒருநாள் சதத்தை ருதுராஜ் பதிவு செய்தார். சதம் அடித்த மகிழ்ச்சியில் அவர் ஹெல்மெட்டைக் கழற்றி பேட்டை உயர்த்த, மறுமுனையில் இருந்த சீனியர் வீரர் விராட் கோலி ஓடி வந்து அவரை இருக்கக் கட்டியணைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சிஎஸ்கே கேப்டனும், ஆர்சிபி முன்னாள் கேப்டனும் இணைந்த இந்தத் தருணம் ரசிகர்களைக் கொண்டாட வைத்தது. இந்த சதத்தின் மூலம் ருதுராஜ் ஒரு சாதனையும் படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிவேக சதம் அடித்த இந்தியர்கள் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
- யூசுப் பதான் - 68 பந்துகள் (2011-ல் செஞ்சூரியனில்)
- ருதுராஜ் கெய்க்வாட் - 77 பந்துகள் (2025-ல் ராய்ப்பூரில்)
IND vs SA: 12 ஆண்டுகளுக்குப் பின் கோலி செய்த சம்பவம்.. மெய்சிலிர்த்த ரசிகர்கள்.. முதல் ரன்னே சிக்ஸர்
விராட் கோலி மற்றும் ருதுராஜ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் விராட் கோலி தனது 53 வது ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார்.


Click it and Unblock the Notifications