உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலும் போச்சு.. இந்தியாவுக்கு ஏற்பட்ட மெகா சிக்கல்.. இனி நாக் அவுட் தான்!
கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த அதிர்ச்சித் தோல்வி, 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பயணத்தில் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தோல்வியின் மூலம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடரை இந்தியாவால் வெல்ல முடியாது. 2025-27 WTC சுழற்சியில் தனது பாதிப் பயணத்தை எட்டியுள்ள இந்திய அணி, இதுவரை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2-0 என்ற ஓர் ஒற்றை டெஸ்ட் தொடரை மட்டுமே வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.

தற்போதைய நிலை: 2025-27 WTC புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 3 தோல்விகளுடன், ஒரு டிராவைச் செய்துள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 54.17 வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இனிவரும் போட்டிகள் மற்றும் சவால்கள்
இந்திய அணிக்கு இந்த WTC சுழற்சியில் இன்னும் 10 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன.
- தென் ஆப்பிரிக்காவுடன் 2-வது டெஸ்ட் (கவுகாத்தி)
- இலங்கை சுற்றுப்பயணம் (2 டெஸ்ட்)
- நியூசிலாந்து சுற்றுப்பயணம் (2 டெஸ்ட்)
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி (சொந்த மண்ணில் 5 டெஸ்ட்)
இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?
இதுவரை நடந்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகளின் வெற்றி சதவீதம் எத்தனை என்பதை பார்க்கலாம்.
- 2019-21: நியூசிலாந்து (72.2%), இந்தியா (70%)
- 2021-23: ஆஸ்திரேலியா (66.7%), இந்தியா (58.8%)
- 2023-25: தென்னாப்பிரிக்கா (69.44%), ஆஸ்திரேலியா (67.54%)
கடந்த மூன்று WTC சுழற்சிகளின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற ஒரு அணி பொதுவாக 65 என்ற வெற்றி சதவீதத்தைத் தாண்ட வேண்டும். இந்த அடிப்படையில், இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற, மீதமுள்ள 10 போட்டிகளில் இருந்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
இந்திய அணி 65 என்ற வெற்றி சதவீத இலக்கைத் தாண்டி, இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமானால், மீதமுள்ள 10 போட்டிகளில் குறைந்தது 8 போட்டிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டும். இது மிகவும் இக்கட்டான நிலை தான்.
இந்திய மண்ணில் நடக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை விட இலங்கை மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்கள் இந்திய அணிக்கு நிச்சயம் சவாலானதாக இருக்கும். எனவே, இந்திய அணி பத்தில் எட்டு டெஸ்ட் போட்டிகளில் வெல்வது என்பது இமாலய இலக்கு தான். இந்திய அணி எத்தனை போட்டிகள் வரை டிரா அல்லது தோல்விகளை எதிர்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
எத்தனை தோல்விகள் அடையலாம்?
- 8 வெற்றிகள் பெற்றால் 68.52 வெற்றி சதவீதத்துடன், இந்தியா இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்டத் தகுதி பெற்றுவிடும்.
- 7 வெற்றிகள், 3 டிரா செய்தால் இதுவும் இந்தியாவை 65%-க்கு மேல் வைத்திருக்கும்.
- 2 தோல்விகள்: இரண்டு போட்டிகளில் தோற்றால், இந்தியாவின் வெற்றி சதவீதம் 64.81% ஆகக் குறையும். இது தகுதி வாய்ப்பை மிகவும் சிக்கலாக்கும்.
- 3 தோல்விகள்: மூன்று தோல்விகளைச் சந்தித்தால், இந்தியாவின் வெற்றி சதவீதம் 60%-க்குக் கீழே சென்றுவிடும், இது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.
எனவே, கொல்கத்தா தோல்வி ஒரு பெரும் பின்னடைவு என்றாலும், இந்திய அணி மீதமுள்ள 10 போட்டிகளிலும், குறிப்பாகச் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிக வெற்றிகளைப் பதிவு செய்து, பின்னர் நியூசிலாந்து மற்றும் இலங்கை மண்ணில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அப்போது தான் 2027 WTC இறுதிப் போட்டிக் கனவை நனவாக்க முடியும். இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இந்திய அணிக்கு ஒரு "நாக்-அவுட்" போட்டி போன்றதுதான்.


Click it and Unblock the Notifications