மும்பை: இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தால் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் ரோகித் சர்மா தேர்வு செய்த பிளேயிங் லெவனும் தோல்விக்கு மற்றொரு காரணம். ஏனென்றால் நேரடியாக இளம் வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை வெளிநாட்டு மண்ணில் அறிமுக செய்தது சரியில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்து 39 ஓவர்கள் வீசி 194 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். ஆனால் மற்றொரு பக்கம் 69.4 ஓவர்களை இணைந்து வீசிய பும்ரா, சிராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் 201 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதன் மூலமாக ஷர்துல் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததும் தோல்வியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பேசுகையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முகேஷ் குமார் விளையாடினால் ரசிகர்களிடையே விமர்சனங்கள் வராது என்று நினைக்கிறேன். ஏனென்றால் முகேஷ் குமாரின் பந்துவீச்சை ரசிகர்கள் ஏற்கனவே போதிய அளவில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அணி நிர்வாகம் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

ஆனால் கேப்டனாக விராட் கோலியும், பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் இருந்திருந்தால், நிச்சயம் பிரசித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார். ஆனால் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இன்னொரு வாய்ப்பை அளிப்பார்கள். அதேபோல் ஷர்துல் தாக்கூர் பேட்டிங் செய்வார் என்பதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் தொடர்வார். ஏற்கனவே அவர் வெளிநாடுகளில் சிறப்பாக பவுலிங் மற்றும் பேட்டிங்கை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.