
முதல் டெஸ்ட் போட்டி
நேற்று நடைபெறவிருந்த 2ம் நாள் ஆட்டம் மழைப்பொழிவு காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று 3ம் நாள் ஆட்டம் முன்கூட்டியே தொடங்கியது. சதத்துடன் இருந்த கே.எல்.ராகுல், 40 ரன்கள் அடித்து அரைசதத்தை எதிர்பார்த்திருந்த ரகானே என இந்தியா வலுவான நிலையில் இருந்தது. எனவே எப்படியும் இன்று 400 ரன்களுக்கு மேல் அடித்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை அனைத்திலும் மண்ணை அள்ளி போட்டார் ரபாடா.

சரிந்த விக்கெட்கள்
இன்று 91வது ஓவர் முதல் 3வது நாள் ஆட்டம் தொடங்கிய போது 3 விக்கெட்களுடன் இந்தியா இருந்தது. ஆனால் 100வது முடிவதற்குள் 9 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. கே.எல்.ராகுல் (123), ரகானே (48) என வெளியேறினர். அதன்பின்னர் வந்த அனைவரும் லுங்கி நெகிடி மற்றும் ரபாடாவின் வேகத்தில் சிக்கி அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 308 ரன்களுக்குள் 9 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையில் உள்ளது.

சொதப்பலுக்கான காரணம்
நன்றாக விளையாடி வந்த இந்திய அணிக்கு வானிலை தான் எமனாக வந்து சேர்ந்துள்ளது. போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று முழுவது மழைப்பெய்துள்ளதால் பிட்ச்-ல் இன்று ஓரளவிற்கு ஈரப்பதம் இருக்கும். அப்படி இருந்தால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங் கிடைக்கும். இன்று புதிய பந்தும் கொடுக்கப்பட்டதால் இவற்றை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் ஏற்படும்.

இந்திய அணிக்கு கட்டாயம்
போட்டி இன்று 3வது நாளை எட்டியுள்ளதால், வேகமாக ரன்களை உயர்த்தி அடுத்த இன்னிங்ஸிற்கு தயாரானால் தான் இந்திய அணியால் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் போட்டி சமனில் முடிவடைய வாய்ப்பு அதிகரிக்கும். பிட்ச்-ம் ஈரப்பதத்தோடு இருப்பதால், சீக்கிரமாக ரன்களை அடித்துவிட்டு தென்னாப்பிரிக்காவை பேட்டிங்கிற்கு அழைத்தால், குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டிவிடலாம். இதன் காரணமாக தான் இந்திய வீரர்கள் இன்று அதிரடிக்காட்ட முயன்று விக்கெட்களை பறிகொடுத்தனர். ஆனால் இவ்வளவு குறைவான ஸ்கோருக்குள் விக்கெட்கள் விழும் என விராட் கோலியே எதிர்பார்த்திருக்க மாட்டார்.


Click it and Unblock the Notifications











