IND vs SA: பும்ராவை போல் இந்த தமிழக வீரர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.. EX பயிற்சியாளர் கருத்து
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வருண் சக்கரவர்த்தி பும்ரா போல் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் பாராட்டியுள்ளார். 34 வயதான வருண் சக்கரவர்த்தி தற்போது இந்திய டி20 அணியில் முக்கிய வீரராக விளங்கி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் வருண் சக்கரவர்த்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு ஏழு டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட் வீழ்த்திய அவர் 7.53 என்ற அளவில் எக்னாமியை வைத்திருந்தார்.

தற்போது 2025 ஆம் ஆண்டு 16 டி20 போட்டியில் விளையாடி 26 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி குறித்து பேசிய முன்னாள் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளரான ஸ்ரீராம் வருண் சக்கரவர்த்தி தன்னைத்தானே மெருகேற்றி வருகின்றார். முன்பை விட தற்போது கடினமான ஓவர்களை வீசுகிறார்.
கேப்டன் சூரியகுமார் வருண் சக்கரவர்த்தியை பவர் பிளேவில் பயன்படுத்துகிறார். 17 மற்றும் 18வது ஓவர்களில் கூட பந்து வீச வைக்கிறார். எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் வருண் சக்கரவர்த்தி பந்து வீசுகிறார். இதன் மூலம் பும்ரா எப்படி இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவாரோ, அதை போல் வருண் சக்கரவர்த்தி டி20 போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஒரு முக்கிய தூணாகவே வருண் சக்கரவர்த்தி விளங்குகிறார். அதுவும் இந்திய ஆடுகளங்களில் வருண் சக்கரவர்த்தி மிகவும் அபாயகரமான வீரராக எதிர் அணிக்கு மாறிவிடுகிறார். வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டுக்கு தாமதமாகவே வந்தார். இதனால் ஒரு விஷயத்தை மட்டும் அவர் நன்றாக புரிந்து கொண்டார்.
மற்றவர்களை விட நாம் வித்தியாசமாக இருந்தால் மட்டுமே, நாம் கவனிக்கப்படுவோம் என்பதை அவர் புரிந்து கொண்டார். இதன் காரணமாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சு வகைகளை அவர் கற்றுக் கொண்டார். இந்திய டி20 அணியில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் எப்போதும் எக்ஸ் ஃபேக்டராக விளங்குவார்கள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது இருக்கும் இந்திய பிளேயிங் லெவனில் குல்தீப், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஒரே அணியில் இடம்பெற முடியாது. இருவரும் புத்திசாலித்தனமான பவுலராக இருக்கின்றனர். ஆனால் நமது அணியில் அதிகப்படியான சுழல் பந்துவீச்சாளர்களுக்கு இடம் தர முடியாது. என்னை கேட்டால் வருண் சக்கரவர்த்தியை நான் முதல் சாய்ஸாக பயன்படுத்துவேன். ஏனென்றால் அவரால் பவர் பிளேவில் பந்து வீச முடியும். குல்தீப்க்கு இன்னும் அந்த திறன் வரவில்லை என்று ஸ்ரீராம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications