IND vs SA: இன்னும் ஒரு செஞ்சுரி தான்.. பாபர் அசாம் ரெக்கார்டுக்கு குறி வைத்த விராட் கோலி
விசாகப்பட்டினம்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி இன்று (சனிக்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, இந்தப் போட்டியில் சதம் அடிக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாமின் அரிய உலக சாதனையைச் சமன் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் என அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சதமடித்த விராட் கோலி, இன்று மூன்றாவது சதத்தை எதிர்நோக்கியுள்ளார்.

ஹாட்ரிக் சதம் - பாபர் அசாம் சாதனை
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 12 வீரர்கள் மட்டுமே தொடர்ந்து மூன்று போட்டிகளில் (ஹாட்ரிக்) சதம் அடித்துள்ளனர். ஆனால், இந்தச் சாதனையை இரண்டு முறை நிகழ்த்திய ஒரே வீரர் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மட்டுமே.
குமார் சங்ககாரா நான்கு முறை இதை செய்து இருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் பாபர் அசாம் இரண்டு முறை செய்து இருக்கிறார். இவர்கள் இருவரை விடுத்து எந்த வீரரும் ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து மூன்று முறை சதம் அடித்ததில்லை.
விராட் கோலி ஏற்கனவே 2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகத் தொடர்ந்து 3 சதங்களை விளாசியுள்ளார். தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் சதம் அடித்துவிட்டதால், இன்றைய போட்டியில் சதம் அடித்தால், இரண்டாவது முறையாக ஹாட்ரிக் சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெறுவதோடு, பாபர் அசாமின் உலக சாதனையைச் சமன் செய்வார்.
கோலிக்கு ராசியான மைதானம்
விசாகப்பட்டினம் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் பிடித்தமான வேட்டைக்காடு. இங்கு இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 3 முறை சதம் அடித்துள்ளார். இங்கு அவரது பேட்டிங் சராசரி 97.83 ஆக உள்ளது. எனவே, இன்றைய போட்டியில் அவர் சதம் அடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தொடர்ந்து 3 சதங்கள் அடித்த ஜாம்பவான்கள்:
- குமார் சங்கக்கரா (இலங்கை): 4 சதங்கள் (2015 உலகக்கோப்பை) - உலக சாதனை.
- பாபர் அசாம் (பாகிஸ்தான்): 2 முறை (2016 மற்றும் 2022-23).
- விராட் கோலி (இந்தியா): 1 முறை (2018).
- ரோஹித் சர்மா (இந்தியா): 1 முறை (2019 உலகக்கோப்பை).
- இவர்களுடன் சேர்த்து மொத்தம் 12 வீரர்கள் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்துள்ளனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா 3வது ஒருநாள் போட்டி..
மற்றொரு சாதனை வாய்ப்பு
இதுதவிர, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 50+ ஸ்கோர் அடித்தவர் என்ற சாதனையைத் தனியாளாகப் படைக்கவும் கோலிக்கு வாய்ப்புள்ளது. தற்போது கோலி, ரிக்கி பாண்டிங் மற்றும் சங்கக்கரா ஆகியோர் தலா 15 முறை 50+ ஸ்கோர் அடித்துச் சமநிலையில் உள்ளனர். இன்று அரைசதம் அடித்தால், கோலி முதலிடத்தைப் பிடிப்பார்.


Click it and Unblock the Notifications