சென்சுரியன்: சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை ஏழு முறை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள குவித்தது. அந்த அணியின் எல்கர் 185 ரன்களும், மார்கோ யான்சன் 84 ரன்களும் விளாசினர்.

இதன் மூலமாக இந்திய அணியை விடவும் தென்னாப்பிரிக்கா அணி 163 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் போட்டியில் வெற்றிபெற மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு ரன்னை கூட எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அதனை தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி சிறிது நேரம் போராடியது. பின்னர் கோட்சியே மற்றும் யான்சன் அட்டாக்கில் வந்த போது சுப்மன் கில் அடுத்தடுத்து சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அவரும் யான்சன் பந்தை சாதாரணமாக நினைத்து 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் 6 ரன்களிலும், கேஎல் ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் நின்றிருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக ரன்களை சேர்த்து வந்தார். அப்போது கோட்சியே வீசிய ஓவரில் விராட் கோலி அபாரமாக ஒரு சிக்சரை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,763 பந்துகளுக்கு பின் விராட் கோலி முதல் சிக்சரை விளாசி இருக்கிறார்.
அதேபோல் 61 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 30வது அரைசதம் இதுவாகும். இதன் மூலமாக நடப்பாண்டில் மட்டும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை விராட் கோலி 7 முறையாக கடந்துள்ளார். இதுவரை இலங்கை ஜாம்பவான் சங்கக்காரா 6 முறை ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்திருந்த நிலையில், சங்கக்காராவின் சாதனையை விராட் கோலி தகர்த்துள்ளார்.