ராய்ப்பூர்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) ராய்ப்பூரில் நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய வலைப்பயிற்சியின் போது நடந்த ஒரு சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரைத் தவிர்த்துச் சென்றது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ராஞ்சி போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்திய அணி ராய்ப்பூர் வந்தடைந்தது. நேற்று மாலை நடைபெற்ற தீவிர வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

வலைப்பயிற்சியில் விராட் கோலி மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். த்ரோ-டவுன் ஸ்பெஷலிஸ்டுகளான ரகு மற்றும் நுவான் செனவிரத்னே வீசிய வேகமான பந்துகளை அவர் எதிர்கொண்டார். பயிற்சி முடிந்ததும், விராட் கோலி தனது இரண்டு பேட்களையும் தோளில் வைத்துக்கொண்டு டிரஸ்ஸிங் ரூம் நோக்கி நடந்தார்.
அப்போது, இரண்டு நெட்ஸ்களுக்கும் நடுவே தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நின்றுகொண்டிருந்தார். பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த கம்பீரைப் பார்த்தும் பார்க்காதது போல, விராட் கோலி ஒரு வார்த்தை கூட பேசாமல், அவரைக் கடந்து சென்றார்.
ராஞ்சி போட்டியில் ரோஹித் அரைசதம் அடித்தபோது கோலி கம்பீரை முறைத்தது போன்ற வீடியோ வெளியான நிலையில், தற்போது பயிற்சியின் போதும் கோலி கம்பீரை உதாசீனப்படுத்தியது இருவருக்கும் இடையில் விரிசல் இருப்பதை காட்டுவதாக ரசிகர்கள் பேசத் தொடங்கி உள்ளனர்.
ரோஹித் செய்த செயல்
கோலி சென்ற சிறிது நேரத்திலேயே, ரோஹித் சர்மாவும் பயிற்சியை முடித்துக்கொண்டு கிளம்பினார். ஆனால் அவர் கோலியைப் போலச் செல்லாமல், கம்பீரிடம் நின்று சிறிது நேரம் பேசினார். ஒரு சிறிய ஆலோசனைக்குப் பிறகே ரோஹித் டிரஸ்ஸிங் ரூம் சென்றார்.
சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது பயிற்சியில் எந்தக் குறையும் வைக்கவில்லை. 2027 உலகக்கோப்பை வரை இவர்கள் ஆடுவார்களா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இருவரும் இளம் வீரர்களுக்கு இணையாகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தப் பயிற்சியின் போது இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிக்ஸர்களாக விளாசினார். பின்னர் அவர் ரிஷப் பண்ட்டுக்கு பந்துவீசவும் செய்தார்.