IND vs SA: “2 சிங்கங்களும் டீமில் இருந்தால்..”.. கம்பீருக்கு மெசேஜ் சொன்ன கோலி சகோதரி பாவனா
ராஞ்சி: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஜோடி ருத்ர தாண்டவம் ஆடிய நிலையில், விராட் கோலியின் சகோதரி பாவனா கோலி திங்ரா இன்ஸ்டாகிராமில் போட்ட ஒரு பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. விமர்சகர்களின் வாயை அடைக்கும் வகையில் அந்தப் பதிவு அமைந்துள்ளது.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் வயது மற்றும் ஃபார்ம் காரணமாக, 2027 உலகக்கோப்பை வரை இவர்கள் அணியில் நீடிப்பார்களா என்ற கேள்வி விமர்சகர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

ராஞ்சியில் கொடுத்த பதிலடி
இந்த விமர்சனங்களுக்கு ராஞ்சி மைதானத்தில் தங்கள் பேட் மூலம் பதிலடி கொடுத்தனர் ரோஹித் மற்றும் கோலி. ரோஹித் சர்மா 57 ரன்களும், விராட் கோலி 135 ரன்களும் குவித்து, 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களின் இந்த மறக்க முடியாத ஆட்டத்தால் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு, விராட் கோலியின் சகோதரி பாவனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அதற்கு அவர் கொடுத்த தலைப்பு தான் முக்கியம். "IYKYK" என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். இது இணையவாசிகளின் மொழியில், "If You Know, You Know" (புரிந்தவர்களுக்குப் புரிந்தால் சரி) என்று அர்த்தம்.
அதாவது, "இந்த இரண்டு சிங்கங்களும் அணியில் இருந்தால் என்ன நடக்கும் என்று புரிந்தவர்களுக்குத் தெரியும். இவர்களைப் பற்றித் தப்புக் கணக்கு போடுபவர்களுக்கு இதுதான் பதில்" என்பதைச் சொல்லாமல் சொல்லி, விமர்சகர்களுக்கு 'நச்' என்று பதிலடி கொடுத்துள்ளார் பாவனா.
ஏற்கனவே டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, "அதிகாரம் பண்ண நினைத்தால் இப்படித்தான் ஆகும்" என்று பயிற்சியாளர் கம்பீரை மறைமுகமாகச் சாடியிருந்தார். மேலும், ராஞ்சி போட்டி முடிந்த உடன் விமர்சகர்களை அமைதியாக இருக்கும்படி எச்சரிக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
தற்போது சகோதரி பாவனாவும் ரோஹித் - கோலி கூட்டணிக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள், "மைதானத்தில் கோலி விளாசுகிறார்.. சமூக வலைதளத்தில் அவர் குடும்பம் விளாசுகிறது.. மொத்தத்தில் விமர்சகர்களுக்கு மரண அடி," என்று கொண்டாடி வருகின்றனர்.
ராஞ்சி வெற்றியைத் தொடர்ந்து, 1-0 என்ற முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் புதன்கிழமை தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. ரோஹித் - கோலி ஜோடி மீண்டும் ஒருமுறை தங்கள் மேஜிக்கை நிகழ்த்துமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications