ராஞ்சி: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இணையத்தில் தற்போது பரவி வருவது விராட் கோலி, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முறைப்பது போன்ற ஒரு வீடியோதான். ரோஹித் சர்மா அரைசதம் அடித்த தருணத்தில் நடந்த இந்தச் சம்பவம், அணிக்குள் நிலவும் பனிப்போரை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், போட்டியின் நடுவே நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸின் போது, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது. ரோஹித் சர்மா தனது 60-வது ஒருநாள் அரைசதத்தைப் பூர்த்தி செய்ததும், பேட்டை உயர்த்தி ரசிகர்களின் கரகோஷத்தை ஏற்றுக்கொண்டார்.

அந்தத் தருணத்தில், டிவி கேமரா டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்த தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நோக்கித் திரும்பியது. கம்பீர் கூலிங் கிளாஸ் அணிந்தபடி, எந்த உணர்ச்சியும் இல்லாமல் மெதுவாகக் கைதட்டிக் கொண்டிருந்தார்.
அடுத்த வினாடியே கேமரா களத்தில் நின்றிருந்த விராட் கோலியை ஃபோகஸ் செய்தது. அப்போது கோலி, டிரஸ்ஸிங் ரூம் இருக்கும் திசையை நோக்கி, முகத்தில் எந்தச் சிரிப்பும் இல்லாமல் வெறித்து முறைப்பது போலக் காணப்பட்டார். அவர் சாதாரணமாகப் பார்த்தாரா அல்லது கம்பீரின் ரியாக்ஷனைப் பார்த்து முறைத்தாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோவை வெட்டி, "கம்பீருக்கு கோலி கொடுத்த ரியாக்ஷன் இதுதான்" என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
ஏற்கனவே டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு கம்பீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கோலியின் இந்த உடல் மொழி அணி நிர்வாகத்திற்கும் சீனியர் வீரர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதைக் காட்டுவதாகச் சில கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தச் சர்ச்சைகளுக்கு நடுவே, ரோஹித் மற்றும் கோலி ஜோடி களத்தில் தங்களது பழைய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியது. ரோஹித் சர்மா 51 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தார். விராட் கோலி, ரோஹித் அமைத்த அடித்தளத்தைப் பயன்படுத்தி, 120 பந்துகளில் 11 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் குவித்து தனது 52-வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தது. இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 349 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.