சென்சுரியன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் சென்சுரியன் ஆடுகளம் குறித்து பார்க்கலாம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணி 5 மாதங்களுக்கு பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு நட்சத்திர வீரர்கள் அனைவரும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்ற வரலாற்றை மாற்ற, இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை அனுபவமும், இளம் வீரர்களும் சரிவர கலவையாக உள்ளனர். அதில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் தென்னாப்பிரிக்கா மண்ணில் பேட்டிங் செய்ததே இல்லை.
இதனால் முழு பொறுப்பும் விராட் கோலி தலை மீதே உள்ளது. சென்சுரியன் மைதானத்தில் விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார் என்பதால், மீண்டும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி நடக்கும் சென்சுரியன் மைதானம் எப்போதும் பவுலர்களுக்கு உதவியாக இருக்கும். வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால், பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க பொறுமை காக்க வேண்டும்.
பிட்ச் குறித்து ஆடுகளத்தின் பராமரிப்பாளரும், முதல் நாளில் இருந்தே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றே தெரிவித்துள்ளார். இதனால் இரு அணி வீரர்களும் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்தை கொஞ்சம் பழையதாக மாறிய பின் பேட்ஸ்மேன்களால் ரன்கள் சேர்க்க முடியும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அதேபோல் இந்திய அணி டாஸ் வென்ற பவுலிங்கை தேர்வு செய்து விரைவாக விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சென்சுரியனில் முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. முதல் நாளில் 96 சதவிகிதம் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும், இரண்டாம் நாளில் 88 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் 2 நாட்கள் ஆட்டம் தடைபடும் என்றே பார்க்கப்படுகிறது. 3ஆம் நாளுக்கு பின் மழைக்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.