IND vs SA: எந்த பிரயோஜனமும் இல்லை.. இன்னும் 5 போட்டிகள் தான்.. அருமையான வாய்ப்பை தவறவிட்ட தீபக் சஹர்
சென்னை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தீபக் சஹர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மிகப்பெரிய வாய்ப்பை இழந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர்களில் முக்கியமான வீரர் தீபக் சஹர். புவனேஷ்வர் குமாரை போல் பவர் பிளே ஓவர்களில் மிகச்சிறப்பாக ஸ்விங் செய்வதில் வல்லவர். அதன் காரணமாகவே சிஎஸ்கே அணி சார்பாக ரூ.14 கோடி கொடுத்து ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார். கடந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 9 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முழு ஃபிட்னஸை எட்ட முடியாத சூழல்நிலையிலும் அணிக்காக களமிறங்கி வெற்றிக்கு உதவியாக இருந்தார். இதன்பின் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக ஆடிய அவருக்கு உடனடியாக இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் களமிறங்கிய அவர், 5வது டி20 போட்டியில் இருந்து சொந்த பிரச்சனை காரணமாக விலகினார்.
இதன்பின் அவரின் தந்தை மூளை பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதன்பின் தீபக் சஹர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால், தீபக் சஹர் தென்னாப்பிரிக்காவுக்கு விமானம் ஏறவில்லை.
இதுகுறித்து பிசிசிஐ மற்றும் தேர்வு குழு நிர்வாகிகளுடமும் அவர் விளக்கம் அளித்துவிட்டார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் தீபக் சஹர் விளையாட வாய்ப்பில்லை என்றும், அவர் விலகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி இன்னும் 5 டி20 போட்டிகளை மட்டுமே விளையாடவுள்ளது. அதற்குள் இந்திய அணியை கட்டமைக்க வேண்டிய நிலை உள்ள நிலையில், தீபக் சஹர் எஞ்சியுள்ள 5 போட்டிகளில் ஆடினால் மட்டுமே அவரின் ரோல் மற்றும் திட்டங்களை மேற்கொள்ள முடியும். அவர் விலகியதால், ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டாலும் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications