கொழும்பு : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கொழும்புவில் நடைபெறுகிறது. இந்திய அணி கடைசியாக தென்னாப்பிரிக்கா மண்ணில் தான் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. அதன் பிறகு ஆறு மாதம் கழித்து தற்போது தான் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறது.
டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் தற்போது இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் திரும்பி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பதவி ஏற்ற பின் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.

இந்த ஒருநாள் தொடரில் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்ற பெரும்பான்மையான வீரர்கள் இதிலும் இடம்பெற்று இருக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவருக்கு ஜோடியாக சுப்மன் கில் களமிறங்குகிறார்.
மூன்றாவது வீரராக விராட் கோலி இருப்பார். நான்காவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரும், ஐந்தாவது வீரராக கே எல் ராகுலும் இருப்பார்கள். ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் செயல்படுவார். பண்ட் அணியில் இருப்பதால் கே எல் ராகுல் சாதாரண வீரராக தான் இருப்பார். ஏழாவது வீரராக ஜடேஜாவுக்கு பதில் அக்சர் பட்டேல் இருப்பார்.
எட்டாவது வீரராக குல்தீப் யாதவும் ஒன்பதாவது வீரராக ஆர்ஸ்தீப் சிங்கும், பத்தாவது வீரராக முகமது சிராஜும், 11 வது வீரராக கலீல் அகமது அல்லது கேகேஆர் அணியின் ஹர்ஷித் ராணாவும் களமிறங்க கூடும். இந்த நிலையில் இந்திய அணியில் 5 ப்ராப்பர் பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர் ஆகியோர் பிளேயிங் லெவனில் உள்ளனர்.
அக்சர் பட்டேலின் பேட்டிங் இந்த பிளேயிங் லெவனில் மிகவும் முக்கியத்துவம் பெற உள்ளது. அக்சர் பட்டேல் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்தியாவின் சமநிலை சிறப்பாக இருக்கும். இதில் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், தற்காலத்திற்கு ஏற்ற மாதிரி பேட்டிங் வரிசை ஆழமாக இல்லை. இது ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் எப்படி சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் பந்து வீசினார்களோ அதை போல் பந்து வீச இந்திய அணியில் ஆள் இல்லை.