மும்பை: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி டை-யில் முடிந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக கடைசி ஒருநாள் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மோசமான முடிவுகளே காரணம் என்று பார்க்கப்படுகிறது. இடது - வலது காம்பினேஷனை முயற்சிப்பதாக கூறி இந்திய பேட்டிங் வரிசையை மொத்தமாக மாற்றி கம்பீர் செய்த சோதனைகள் விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெல்ல வாய்ப்பே இல்லை என்றும் சில கருத்துகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் குஜராத் அணியின் பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா கம்பீரின் நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், இந்திய அணி இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்கு பின்னரே அடுத்த ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதனால் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அவர்களின் இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளர் என்பதை அறிவேன். அதற்காக சீனியர் வீரர்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்பது தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரையும் கம்பீர் நன்றாக அறிவார். இரு வீரர்களின் மனநிலையையும் புரிந்து கொள்ள கம்பீர் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அவருக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது. புதிய வீரர்களை வைத்து இந்த தொடரில் விளையாடி இருக்கலாம். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஹோம் சீசனில் கம்பேக் கொடுத்திருக்கலாம். கம்பீர் இரு வீரர்களையும் அழைத்ததை தவறாக சொல்லவில்லை. ஆனால் ஒருநாள் தொடர் கம்பீர் திட்டங்களை மாற்றி இருக்கலாம் என்பதே எனது பார்வை என்று கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்திருந்தால், கம்பீர் நினைத்ததை போல் இடது - வலது காம்பினேஷனில் எளிதாக இந்திய அணியை மாற்றியிருக்க முடியும். அதேபோல் ஒருநாள் தொடருக்கான பேக் அப் வீரர்களையும் கம்பீரால் தயார் செய்திருக்கலாம். ஏனென்றால் ஜெய்ஸ்வால், ருதுராஜ், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் என்று ஏராளமான வீரர்கள் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.