கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, புதிய துணைக் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இதற்கான காரணம் குறித்து கேள்வி எழுந்த போது, சுப்மன் கில் 3 வடிவிலான போட்டிகளிலும் விளையாடக் கூடியவராக இருக்கிறார். அதனால் கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ் உள்ளிட்ட சீனியர்கள் இருக்கும் போது, சுப்மன் கில்லுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது ஆச்சரியம் அளித்தது. இதன் மூலமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்லை தயார் செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்ததாக விவாதங்கள் எழுந்தன.

இதனால் சுப்மன் கில் பேட்டிங்கில் ஒரு காட்டு காட்டுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஏற்கனவே ஜிம்பாப்வே டி20 தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போது, சுப்மன் கில் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலாவது ரன் மெஷினை போல் ரன்களை குவிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் 35 பந்துகளுக்கு 16 ரன்களும், 2வது ஒருநாள் போட்டியில் 44 பந்துகளில் 35 ரன்களும், கடைசி ஒருநாள் போட்டியில் 14 பந்துகளில் 6 ரன்களும் என்று மொத்தமாக 3 போட்டிகளில் 57 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். கேப்டனாக ஒரு பக்கம் சிறப்பாக விளையாடி ரோஹித் சர்மா ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து வந்தார்.
மறுபக்கம் தொடக்க வீரராக வந்த துணைக் கேப்டன் சுப்மன் கில் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கூட பொறுப்பின்றி விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். மற்ற வீரர்களை விடவும் சுப்மன் கில்லுக்கு சிறப்பாக விளையாட போதுமான நேரம் கிடைத்தது. ஏனென்றால் ரோஹித் சர்மா ஒரு முனையில் ரன்கள் சேர்த்த போது, எவ்வளவு டாட் பால்களை வேண்டுமானாலும் விளையாடி ஃபார்முக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் 3 ஒருநாள் போட்டிகளிலும் சுப்மன் கில் தானாக முன் வந்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதனால் துணைக் கேப்டன் நியமனத்திற்கு பின் சுப்மன் கில்லின் கவனம் பேட்டிங்கில் இல்லை என்று விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே குஜராத் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட போதும், சுப்மன் கில்லால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால் சச்சினை போல் சுப்மன் கில்லுக்கும் பொறுப்பு கொடுத்தால் சிக்கல் வரும் என்றும் சில விவாதங்கள் எழுந்துள்ளன.