கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன் மூலமாக இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடைசியாக இந்திய அணி 1997ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரில் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்தது.

தற்போது 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஒருநாள் தொடரில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்திய அணியையும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து 27 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களிடம் இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கிரிக்கெட் வரலாற்றிலேயே இரு தரப்பு ஒருநாள் தொடரில் எந்த அணியும் இவ்வளவு விக்கெட்டுகளை ஸ்பின்னர்களிடம் இழந்ததில்லை. முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளிலும் தலா 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனையை படைத்துள்ளது.
அதிலும் இலங்கை அணியின் இளம் ஸ்பின்னரான துனித் வெல்லாலகே 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்வார்கள் என்ற நிலை மாறி, ஸ்பின்னர்களிடம் திணறுவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. சேப்பாக்கம் மைதானம் போன்ற பிட்சிலேயே இப்படி திணறினால் எப்படி இந்திய வீரர்களை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இந்திய பேட்ஸ்மேன்களின் இந்த சரிவுக்கு உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடாததே காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பின், அதிக ரன்களை விளாசியுள்ள இந்திய வீரர் அக்சர் படேல் தான். இதன் மூலமாக விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் ஸ்பின்னர்களுக்கு திணறுவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.