கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆனாலும், இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு ஒரு நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் கிடைத்திருக்கிறார். அவர்தான் டுனித் வெல்லாலகே.

இந்திய அணியை தன் பந்துவீச்சால் கட்டுப்படுத்திய அவர் தான் வீசிய முதல் 13 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்திய அணியின் டாப் ஆர்டரின் மூன்று விக்கெட்களை அள்ளினார். அதில் ரோஹித் சர்மாவும் ஒருவர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 53 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியை கட்டுப்படுத்த வெல்லாலகேவை பந்து வீச அழைத்தார் இலங்கை கேப்டன் தசுன் சனகா.
அவர் தன் முதல் பந்தில் சுப்மன் கில்லை வெளியேற்றினார். அடுத்ததாக விராட் கோலி விக்கெட்டையும் வீழ்த்தினார். அதன் பின் அவர் தான் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மாவை பவுல்ட் அவுட் செய்தார்.
அந்த பந்து அதிகமாக திரும்பியதால் அதை தடுக்க முடிவு செய்தார் ரோஹித் சர்மா. அதற்காக அவர் பேக் ஃபூட்டில் நின்று, பேட்டை தன்னால் முடிந்த வரை கீழே கொண்டு வந்தார். ஆனால், பந்து பேட்டை கடந்து சென்று ஸ்டம்புகளை பதம் பார்த்தது.
இதை எதிர்பார்க்காத ரோஹித் சர்மா 53 ரன்கள் எடுத்த நிலையிலேயே ஆட்டமிழந்தார். அதுவரை இலங்கை அணியை புரட்டி எடுத்த ரோஹித் பரிதாபமாக ஆட்டமிழந்தார். அப்போது சில கிரிக்கெட் விமர்சகர்கள் ரோஹித் அந்த பந்தை சரியாக ஆடவில்லை என்ற விமர்சனத்தை முன் வைத்தனர்.
ஆனால், அதை மறுத்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மாரவன் அட்டப்பட்டு, அது முற்றிலும் வெல்லாலகேவின் திறமையால் வீழ்ந்த விக்கெட்தான். ரோஹித் சர்மா அதை தவறாக ஆடவில்லை. யாராக இருந்தாலும் ரோஹித் ஆடியது போன்ற ஷாட்டை அவர் ஆடிய அதே விதத்தில்தான் ஆடி இருப்பார்கள் என்றார். மேலும், ரோஹித் சர்மாவுக்காக வருத்தப்படுகிறேன் என்றார்.
மேலும், வெல்லாலகே வீசிய பந்தின் லென்த் ரோஹித் சர்மாவால் அடிக்க முடியாதபடி இருந்தது. ஃபிரன்ட் ஃபூட் ஆக இருந்தாலும், பேக் ஃபூட் ஆக இருந்தாலும் அவரால் அதை ஆட முடியாது. துரதிர்ஷ்டவசமாக பந்து மிகவும் கீழே வந்து விட்டது. அதனால் தான் ரோஹித் சர்மாவால் அதை தடுக்க முடியவில்லை. பேட்ஸ்மேனை விமர்சிப்பதை விட பந்துவீச்சாளரை தான் நாம் பாராட்ட வேண்டும் என்றார் அட்டப்பட்டு.
வெல்லாலகே இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 5 விக்கெட்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 50 ஓவர்களில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனினும், இலங்கை அணியை 173 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.