கொழும்பு : இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மிகக் குறைவான ரன்களை மட்டுமே எடுத்து இருந்தும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 356 ரன்கள் குவித்து இருந்தது. அதே மைதானத்தில் அதற்கு மறுநாள் நடந்த போட்டியில் இந்திய அணியால் சரியாக ரன் குவிக்க முடியவில்லை.

ரோஹித் சர்மா மட்டுமே 53 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்து, இலங்கையின் சுழற் பந்துவீச்சுக்கு தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தார்கள். இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கையின் சுழற் பந்துவீச்சாளர் டுனித் வெல்லாலகே அசத்தலாக பந்து வீசி 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை அள்ளினார். சரித் அசலங்கா 9 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் அள்ளினார். அடுத்து இலங்கை அணி 214 ரன்கள் என்ற எளிய இலக்கி நோக்கி ஆடத் துவங்கியது.
பும்ரா பந்துவீச்சில் இந்திய அணிக்கு அபாரமான துவக்கத்தை அளித்து இலங்கையின் 2 டாப் ஆர்டர் விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து இந்திய அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்கள் வீழ்த்திய நிலையிலும், கேப்டன் ரோஹித் சர்மா பதற்றத்தோடு தான் இருந்தார்.
அப்போது குல்தீப் யாதவ் 18வது ஓவரில் சமர்விக்ரமா விக்கெட்டை வீழ்த்திய உடன் ரோஹித் சர்மா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த அவர் சமரவிக்ரமா முகத்திற்கு நேராக முஷ்டியை மடக்கி தன் வெற்றிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
பொதுவாக ரோஹித் இப்படி மற்ற அணி வீரர்கள் முன் சென்று விக்கெட் வீழ்ச்சியை கொண்டாட மாட்டார். ஆனால், அன்றைய போட்டியில் விக்கெட் விழ வேண்டுமே என்ற பதற்றத்தில் இருந்த அவர் குல்தீப் விக்கெட் வீழ்த்திய உடன் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார்.
அதன் பின் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. தனஞ்செயா டி சில்வா 41 மற்றும் வெல்லாலகே 42 ரன்கள் எடுத்து கடைசி சில ஓவர்களில் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
எனினும், இலங்கை அணி 41.3 ஓவரில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம் 2 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் மொத்தமாக 4 புள்ளிகளை எடுத்து இறுதிச் சுற்றுக்கும் முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.