கிறிஸ் கெய்ல் சாதனை சமன்.. சச்சின், தோனி, கோலி வரிசையில் ரோஹித் சர்மா.. ஹிட்மேன் படைத்த மெகா சாதனை!
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் வாழ்வா, சாவா என்று களமிறங்கிய இந்திய அணி 249 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியைடைந்தது.
இருப்பினும் இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 ஸ்டைலில் சிறப்பாக பேட்டிங் செய்தார். முதல் ஒருநாள் போட்டியில் 47 பந்துகளில் 58 ரன்களும், 2வது ஒருநாள் போட்டியில் 44 பந்துகளில் 64 ரன்களும், கடைசி ஒருநாள் போட்டியில் 20 பந்துகளில் 35 ரன்களும் சேர்த்து 3 போட்டிகளில் 157 ரன்களை விளாசினார்.

இதன் மூலமாக இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 3,113 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 2,652 ரன்களுடன் 2வது இடத்திலும், தோனி 2,383 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு பின் ரோஹித் சர்மா 2,021 ரன்களுடன் 4வது இடத்தில் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை 265 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 331 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக கிறிஸ் கெய்க் 301 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 331 சிக்சர்கள் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார்.
அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 331 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி 351 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இதில் இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா 270 சிக்சர்களுடன் 4வது இடத்திலும், 229 சிக்சர்களுடன் தோனி 5வது இடத்திலும் உள்ளனர்.
இதனால் இன்னும் ஒரு சில ஒருநாள் தொடர்களிலேயே ரோஹித் சர்மாவால் எளிதாக அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருவதால், பாகிஸ்தான் மண்ணிலேயே வைத்து அப்ரிடியின் சாதனையை ஹிட்மேன் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications