கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை இருக்கிறது.
இதனால் கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால், 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைக்கும். இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இந்த நிலையில் விராட் கோலி 11 ரன்கள் எடுத்திருந்தபோது அகிலா தனஞ்செயா வீசிய பந்தில் எல் பி டபிள்யூ ஆனார். இதற்கு இலங்கை வீரர்கள் அவுட் கேட்க களத்தில் இருந்த நடுவரும் இதற்கு அவுட் வழங்கினார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத விராட் கோலி மூன்றாம் நடுவரின் உதவியை நாடினார்.
அப்போது டி ஆர் எஸ் ஐ பயன்படுத்தி இது அவுட்டா இல்லையா என பார்க்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்ட பிறகுதான் விராட் கோலியின் காலில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. இதனால் மூன்றாம் நடுவர் இது அவுட் இல்லை என்றும் கள நடுவர் தனது முடிவை மாற்ற வேண்டும் என கூறினார்.
இதனை அடுத்து களத்தில் இருந்த நடுவர் இதை அவுட் இல்லை என்று மாற்றி உத்தரவிட்டார். இதனை இலங்கை வீரர்கள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விராட் கோலி அவுட் தான் என்றும் இதை எப்படி நீங்கள் நாட் அவுட் என்று கூறலாம் என கேப்டன் அசலங்கா நடுவரிடம் போர் கொடி தூக்கினார்.
அதற்கு நடுவர் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை ஆராய்ந்ததாகவும் ஸ்நிக்கோ மீட்டரில் பேட்டில் பந்து பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக கூறி விளக்கினார். எனினும் இதனை கொஞ்சம் கூட இலங்கை வீரர்கள் ஒப்புக் கொள்ளாமல் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர். இதற்கு ஒரு படி மேல் போய் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் தன்னுடைய ஹெல்மெட்டை எடுத்து வீசினார். விராட் கோலிக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக கிடைத்தது. ஆனால் அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் 14 ரன்களிலே ஆட்டம் இழந்தார்.