கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் ஒரு ரன்னை எடுக்க முடியாமல் 2 விக்கெட்டுகளையும் பறி கொடுத்ததால், ஆட்டம் டை-யில் முடிந்தது. இதனால் இலங்கை அணி வீரர்களும், ரசிகர்களும் மைதானத்திலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்த போதும் இந்திய அணியால் வெற்றி பெற முடியாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனை 2வது ஒருநாள் போட்டியில் சரி செய்ய இந்திய அணி தீவிரமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 32 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இதனால் 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பியுள்ளனர். அதேபோல் 2வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி பிரம்மாண்ட சாதனை படைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் 128 ரன்களை எடுத்தால், 14 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
அதுமட்டுமல்லாமல் 14 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலியால் முறியடிக்க முடியும். சச்சின் டெண்டுல்கர் தனது 359வது ஒருநாள் இன்னிங்ஸில் தான் இந்த சாதனையை படைத்திருந்தார். ஆனால் விராட் கோலியால் 282வது ஒருநாள் இன்னிங்ஸிலேயே 14 ஆயிரம் ரன்களை சேர்க்க முடியும்.
அதேபோல் 14 ஆயிரம் ரன்களை விளாசிய 3வது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலியால் படைக்க முடியும். இதற்கு முன்பாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா ஆகியோர் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை விளாசி இருக்கின்றனர்.
அதேபோல் இன்றைய ஆட்டத்தில் 92 ரன்களை விளாசினால் சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா மற்றும் ரிக்கி பாண்டியா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.